திருப்பூர்-அவினாசி சாலை.. மாநகர போலீஸ் எடுத்த அதிரடி முடிவு.. திருப்பூர் வடக்கு எம்எல்ஏ எதிர்ப்பு
திருப்பூர்-அவினாசி சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றினால் அவினாசி சாலையில் அமைந்துள்ள எம்.எல்.ஏ.அலுவலகத்திற்கு வரும் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும். மேலும் அவினாசி சாலையில் போலீஸ் கமிஷனர் அலுவலக சந்திப்பில் இருந்து புஷ்பா மேம்பாலம் வரையிலும் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பனியன், தொழில் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
திருப்பூர் மாநகரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக நான்காவது பெரிய நகரமாக திருப்பூர் உருவெடுத்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் மதுரையை முந்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில் வெளியூர் மக்கள் தொகையை கணக்கிட்டால், மதுரையை விடவும் மக்கள் தொகை திருப்பூரில் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த அளவிற்கு மக்கள் பிழைப்பு தேடி திருப்பூருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் திருப்பூர் மாநகரம் நகரின் எல்லா பக்கமும் வளர்ந்துவிட்டது. பெருமாநல்லூர், பல்லடம், அவினாசி, நல்லூர், கோவில்வழி, ஊத்துக்குளி, மங்கலம் நகருக்குள் நுழையும் அந்த திசையிலும் ஊர் வளர்ந்து பெருத்துவிட்டது. குறிப்பாக அவினாசி சாலையில் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கணக்கிட்டால், 16 கிமீ தூரத்திற்கு நகரம் விரிவடைந்துள்ளது. இதையடுத்து அந்த சாலையை ஒருவழிப்பாதையாக்கலாமா என்று போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை, திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறுகையில், "திருப்பூர்-அவினாசி சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றினால் அவினாசி சாலையில் அமைந்துள்ள எம்.எல்.ஏ.அலுவலகத்திற்கு வரும் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும். மேலும் அவினாசி சாலையில் போலீஸ் கமிஷனர் அலுவலக சந்திப்பில் இருந்து புஷ்பா மேம்பாலம் வரையிலும் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பனியன், தொழில் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும்.
அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் சிறுவியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கும். மேலும் பெருமாநல்லூர் சாலையில் ஏற்கனவே அதிக வாகன போக்குவரத்து காரணமாக, பல சிரமங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
பெருமாநல்லூர் சாலையில் இருந்து ராம்நகர் சாலை வழியாக குமார் நகரை அடைய வாகனங்கள் செல்லும்போது அங்கு ஏற்கனவே சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளால் கூடுதல் போக்குவரத்து நெரிசல்தான் ஏற்படும். எனவே அவினாசி சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்வதை கைவிட வேண்டும். தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications