திருப்பூர்: படித்துறை பாண்டி பாணியில் வட இந்தியர்கள்- விபத்து ஏற்படுத்தியதாக தமிழரிடம் பணம் பறிப்பு!
திருப்பூரில் தமிழரிடம் வட இந்தியர்கள் பணம் பறிக்கும் காட்சிகளுடனான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
திருப்பூர்: படித்துறை பாண்டி பாணியில் வட இந்தியர்கள்- விபத்து ஏற்படுத்தியதாக தமிழரிடம் பணம் பறிப்பு!
திருப்பூர்: திருப்பூரில் வட இந்தியர்கள்- தமிழர்களிடையே மோதல் போக்குகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தற்போது நடிகர் வடிவேலுவின் படித்துறை பாண்டி கேரக்டர் பாணியில் திருப்பூரில் விபத்து ஏற்படுத்தியதாக நாடகமாடி தமிழரிடம் வட இந்தியர்கள் பணம் பறிப்பதாக புதிய பஞ்சாயத்து கிளம்பியுள்ளது.
தமிழ்நாட்டின் பெரும்பாலான நகரங்களில் வட மாநிலத்தவர் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். குறைந்த ஊதியத்தில் பல மணிநேரம் வட இந்திய தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதனால் தமிழ்நாட்டு தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு உரிமை, தொழிற்சங்க உரிமை அனைத்தும் பறிபோகிறது என்பது நீண்டகால குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இந்தி மொழியில் வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், இந்தி மொழியில் பேருந்து பெயர் பலகைகள் வைக்கப்படுகின்றன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் வட மாநிலத்தவர் பிரச்சனையை பிரதானமாக எழுப்பி வருகின்றனர். வடமாநிலத்தவரை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சியின் சின்னத்துக்குதான் ஓட்டுப் போட வேண்டும் என சீமான் உள்ளிட்டோர் பிரசாரமும் செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு திருப்பூரை மையமாக வைத்து வெளியான ஒரு வீடியோ பெரும் பதற்றத்தை ஏற்படுத்திவிட்டது. திருப்பூரில் 100க்கும் மேற்பட்ட வட இந்திய தொழிலாளர்கள், தமிழக தொழிலாளர் ஒருவரை கொடூரமாக தாக்குகின்றனர் என்ற வாசகத்துடன் அந்த வீடியோ வலம் வந்தது. அந்த வீடியோவில், வட இந்தியர்கள் கையில் கற்கள், பெல்ட், மரக்கட்டைகளுடன் தமிழ்நாட்டு இளைஞர்களை தாக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

பின்னர் இது தொடர்பாக போலீசார் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக பேக்கரி ஒன்றில் சிகரெட்டை முகத்தில் ஊதியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால்தான் இந்த அடிதடி நடந்தது எனவும் கூறப்பட்டது. இருந்தபோதும் பல்வேறு தமிழ் அமைப்பினர் வட இந்தியர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தமிழ்நாட்டு தமிழர்களைத் தாக்கியதாக பீகார் இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் போலீசார்.
இப்போது மீண்டும் திருப்பூரை மையமாக வைத்து மற்றொரு வீடியோ வலம் வருகிறது. தமிழ்நாட்டு நபரிடம் வட இந்தியர்கள் பணம் பறிப்பதாக இந்த வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக நாம் விசாரித்த போது, தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம் இடித்துவிட்டதாக கூறி வடமாநில இளைஞர்கள் அந்த நபரை சூழ்ந்து கொண்டிருக்கின்றனர். இத்தனைக்கும் விபத்து ஏற்படாத நிலையிலும் விபத்து நடந்துவிட்டது என கூறி பணம் கேட்டிருக்கின்றனர். வேறுவழியே இல்லாமல் தமிழ்நாட்டு இளைஞரும் கூகுள் பே மூலம் ரூ500 பணம் கொடுத்திருக்கிறார். ஆனால் கூடுதல் பணம் கேட்டு அந்த இளைஞரை வடமாநிலத்தவர் மிரட்டி இருக்கின்றனர். இந்த வீடியோதான் இப்போது வலம் வருகிறது. இது தொடரபாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கருப்பசாமி குத்தகைதாரர் என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு படித்துறை பாண்டி என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அதில் வாகனங்கள் வரும் போது குறுக்கே விழுந்து மோதிவிட்டதாக நாடகமாடி பணம் பறிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். திருப்பூரில் வட இந்தியர்கள், வடிவேலு போல படித்துறை பாண்டிகளாக உருமாறி தமிழ்நாட்டு இளைஞர்களிடம் பணம் பறிக்கின்றனரோ என்பதாகவே இந்த வலம் வரும் வீடியோ காட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.












Click it and Unblock the Notifications