திருப்பூரில் நாதுராம் கோட்சே வீரவணக்க நாள்.. சிவசேனாவை சேர்ந்தவர்கள் மீது பாய்ந்தது வழக்கு!
திருப்பூர்: நமது தேசத்தை சுதந்திர காற்றை சுவாசிக்க செய்த தேசப்பிதா மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். இந்த படுபாதக செயலை செய்த நாதுராம் கோட்சே 1949-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி ஹரியானா மாநிலத்தின் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
தேசப்பிதாவை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தேசத்துரோகி என்றபோதிலும் சில இந்துத்வாவாதிகள் நாதுராம் கோட்சேவை பெரிய மாவீரர் போலவும், ஏதோ நாட்டுக்கு தியாகம் செய்து விட்டது போலவும் கொண்டாடி வருகின்றனர்.

தேசத்துரோகி நாதுராம் கோட்சே
குறிப்பாக உத்தரபிரதேசம், குஜாத் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் நாதுராம் கோட்சே நினைவு நாளை வீரவணக்க நாளாக கொண்டாடுவது வழக்கமாகி விட்டது. நாதுராம் கோட்சே நினைவு நாளில் அவனது உருவபடத்துக்கு மரியாதை செலுத்தி அவனுக்கு ஆதரவாக கோஷங்களும் எழுப்பபட்டு வருகின்றன. இப்படி வட மாநிலங்களில் நடக்கும் கலாசாரம் தமிழ்நாட்டிலும் புகுந்துள்ளது.

யுவ சேனா சார்பில் அனுசரிப்பு
தமிழக்த்தின் திருப்பூரில் உள்ள சிவசேனா அலுவலகத்தில் யுவ சேனா சார்பில் கடந்த 15-ம் தேதி நாதுராம் கோட்சே நினைவுநாள் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற யுவ சேனா நிர்வாகிகள் நாதுராம் கோட்சே உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். அப்போது ''எங்கள் நோக்கம் இந்து ராஷ்டிரம்" "எங்கள் கடமைகள் இந்து மக்களின் சுதந்திரம் மற்றும் மேம்பாட்டிற்காக சேவை செய்வதே" என்பது உள்ளிட்ட கோட்ஸேவை வாழ்த்தி கோஷம் எழுப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

போலீஸார் வழக்குப்பதிவு
நாதுராம் கோட்சே நினைவு நாளை அனுசரிக்கும் தகவல் திருப்பூர் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நாதுராம் கோட்சேவின் நினைவு நாளைக் கொண்டாடியதற்காக யுவசேனாவைச் சேர்ந்தவர்கள் மீது திருப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஶ்ரீரங்கம் கோவிலில் சர்ச்சை
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகள் மிகவும் அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் கேதார்நாத்தில் பிரதமர் மோடி ஆதி சங்கரர் சிலையை திறந்து வைத்தார். இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சி ஶ்ரீரங்கம் கோவிலில் திரையில் நேரடியாக ஒளிபரப்பட்டது. இதில் பாஜகவினரும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications