மீண்டும் மீண்டுமா.. பிரசார வேனில் தொங்கிய தவெக தொண்டர்.. பவுன்சர் செய்த காரியம்
திருப்பூர்: விஜய் நேற்று முன் தினம் காரைக்குடியில் ரோடு ஷோ சென்றபோது தவெக தொண்டர்கள் சிலர் விஜய்யின் பிரசார வாகனத்தின் மீது தொங்கியபடி வந்தனர். அப்போது வாகனத்தின் மேலே இருந்த பவுன்சர் காலால் மிதித்த சம்பவம் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. இந்த நிலையில் இன்று திருப்பூரில் விஜய் வாகனத்தில் தொங்கியபடி சென்ற தொண்டர் ஒருவரை பவுன்சர் தள்ளிய சம்பவம் நடந்து உள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுக்க பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஒரு நாள் பிரசாரம் ஒரு நாள் விடுமுறை என விஜய் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று முன் தினம் விஜய் காரைக்குடியில் பரப்புரை மேற்கொள்ள இருந்தார். இதற்காக அவர் மதுரையில் இருந்து காரைக்குடி சாலை மார்க்கமாக பிரசார வேனில் பயணம் செய்தார்.

ஷூ காலால் மிதித்த பவுன்சர்
அப்போது வழிநெடுகிலும் தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் விஜய்யும் பிரசார வாகனத்தின் நின்றபடி கை காட்டிக் கொண்டே சென்றார். அப்போது காரைக்குடி அருகே வாகனம் வந்தபோது தவெகவினர் சிலர் விஜய்யை பார்ப்பதற்காக வாகனத்தில் தொங்கியபடி வந்தனர். வாகனத்தின் கம்பியினை பிடித்துக்கொண்டு வந்தனர். அப்போது வாகனத்தின் மேலே இருந்த விஜய்யின் பவுன்சர் கீழே இறங்கும்படி அவர்களது கைகளில் ஷூ காலால் மிதித்தார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவியதோடு, விஜய்யின் பவுன்சர்கள் மீது பலரும் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினர். இதற்கு பதில் அளித்த தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், வேண்டும் என்றே யாரும் அப்படி செய்வதில்லை. அவர்களுக்கும் கடும் மன அழுத்தம் இருக்கும். எதிர்பாராவிதமாக இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியது என்று கூறியிருந்தார்.
விஜய் வாகனத்தில் தொங்கிய நபர்
இந்த நிலையில் தான் இன்று விஜய் திருப்பூரில் பரப்புரை மேற்கொண்டார். இதற்காக பெருமாநல்லூர் வந்து கொண்டிருந்த விஜய்யின் வாகனத்தை எப்போதும் போல தவெகவின இரு சக்கர வாகனத்தில் தலைக்கசம் அணியாமல் விதிமுறைகளை பின்பற்றாமல் பின் தொடந்தபடி வந்தனர். சில விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்தபடி ஓடி வந்தனர்.
அப்போது ஒருவர் திடீரென விஜய்யின் பிரசார வாகனத்தின் மீது ஏறினார். விஜய்யிடம் எதோ கேட்டுக்கொண்டிருந்தார். வாகனம் வேகமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் விஜய் ஏதோ கூறி பார்த்தும் அவர் கீழே இறங்கவில்லை. இதையடுத்து வாகனத்தில் உள்ளே இருந்த பவுன்சர் ஒருவர் கதவை திறந்து அந்த நபரை கீழே இறங்குமாறு தள்ளினார்.
தள்ளிவிட்ட பவுன்சர்
பின்னால் இருசக்கர வாகனங்களும், போலீஸ் வாகனங்களும் முன்னும் பின்னுமாக வந்துகொண்டிருந்த நிலையில் திடீரென அவர் தள்ளிவிட்டுள்ளார். எனினும் நல்வாய்ப்பாக அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. விஜய் எவ்வளவு அறிவுறுத்தியும் தொடர்ந்து தவெக தொண்டர்கள் சிலர் எந்த விதிமுறைகளையும் மதிக்காமல் வாகனத்தை பின் தொடரும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். விஜய் வெளியில் வந்தாலே எவ்வித கட்டுப்பாடும் இன்றி பின் தொடரும் ரசிகர்களால் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகின்றன. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலைக்கும் தள்ளப்படுகின்றன. இளைஞர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications