திருப்பூரில் ஏடிஎம்மிற்கு போன சாவித்திரி.. டெபாசிட் செய்த இளைஞர்.. ஏடிஎம் கார்டில் இருந்த ட்விஸ்ட்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெரியார் காலனி கண்ணம்பாளையத்தை சேர்ந்த துரைசாமி என்பவரது மனைவி சாவித்திரி, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 6-ந் தேதி பெருமாநல்லூர் அருகே உள்ள பொதுத்துறை வங்கி ஏ.டி.எம்.-ல் டெபாசிட் செய்ய சென்றுள்ளார். அப்போது அவரிடம் ஏ.டி.எம்.-ல் பணம் டெபாசிட் செய்ய உதவுவது போல் நடித்து ரூ.1 லட்சம் பணத்தை நூதனமாக திருடி சென்ற பீகார் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பெரியார் காலனி கண்ணம்பாளையத்தை சேர்ந்த 39 வயதாகும் துரைசாமி, என்பவருடைய மனைவி சாவித்திரி (35). இவர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள். கடந்த ஜனவரி 6-ந் தேதி பெருமாநல்லூர் அருகே உள்ள பொதுத்துறை வங்கி ஏ.டி.எம்.-ல் சாவித்திரி, ரூ.38 ஆயிரத்து 500-ஐ டெபாசிட் செய்வதற்காக போயிருக்கிறார். அப்போது சாவித்திரிக்கு பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் டெபாசிட் செய்ய தெரியாததால் அருகில் இருந்த நபரிடம் டெபாசிட் செய்து தரும்படி கோரியுள்ளார்.

அந்த குறிப்பிட்ட நபர் சாவித்திரியிடம் ஏ.டி.எம். கார்டு மற்றும் பின்நம்பர் வாங்கி கொண்டு டெபாசிட் செய்து கொடுத்திருக்கிறார். டெபாசிட் செய்தவுடன் ஏ.டி.எம். கார்டை திருப்பி சாவித்திரியிடம் அந்த நபர் கொடுத்திருக்கிறார். அந்த ஏ.டி.எம். கார்டை வாங்கிக்கொண்டு சாவித்திரி வீட்டிற்கு சென்று விட்டார். அப்போது அவரது செல்போனுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 4 முறை பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும் ரூ.64 ஆயிரத்து 500-க்கு பொருள் வாங்கப்பட்டதாகவும் குறுஞ்செய்தி வந்திருக்கிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சாவித்திரி குறிப்பிட்ட பொதுத்துறை வங்கிக்கு சென்று மேலாளரிடம் விவரத்தை கூறியுள்ளார். உடனே சாவித்திரி வைத்திருந்த ஏ.டி.ஏம். கார்டை வாங்கி வங்கி மேலாளர் பார்த்தபோது அது போலி ஏ.டி.எம். கார்டு என்பது தெரியவத்து. பணத்தை டெபாசிட் செய்ய சென்றபோது உதவி செய்வது போல் நடித்த ஆசாமிதான் ஏ.டி.எம்.கார்டை மாற்றி கொடுத்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். நேற்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நியூ திருப்பூர் ஏ.டி.எம். அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பீகாரை சேர்ந்த மனோஜ் குமார் சானி (31), மன்சூர் அலாம் (28) என்பதும், சாவித்திரியிடம் பணத்தை டெபாசிட் செய்வது போல் நடித்து பணத்தை அபேஸ் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவர்கள் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications