உங்களால் முடியவில்லை என்றால் காவல்துறைக்கே அவமானம்.. திருப்பூரில் கணவரை பறிகொடுத்த பெண் ஆவேசம்
திருப்பூர்: “என் புருஷனை தூக்கத்திலேயே வெட்டி கொண்ணுட்டாங்க.. என் பையனுக்கு 7 வயது தான் ஆகிறது.. இன்னொரு பிள்ளைக்கு 12 வயசு ஆகிறது... கொன்றவர்களை என் கண் முன்னால் கொண்டு வாங்க மேடம்.." என்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணவரை பறிகொடுத்த பெண், போலீஸ் கமிஷனரிடம் கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கொடூரமாக வெட்டிக் கொன்று நகை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது மர்ம கும்பல்.. செந்தில்குமார் என்பவரின் குடும்பத்தில் அவர் உள்பட 3 பேரை கொன்று நகை பணத்தை கொள்ளையடித்துள்ள அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி- அலமாத்தாள் தம்பதி. இவர்களுக்கு சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில் சொந்தமாக விவசாய நிலம் இருக்கிறது. அங்கு விவசாயம் செய்து கொண்டே, அதே தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். தெய்வசிகாமணி- அலமாத்தாள் தம்பதிக்கு செந்தில்குமார் என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி, மனைவி கவிதா மற்றும் மகன், மகளுடன் கோவையில் வசித்து வருகிறார். செந்தில்குமார் கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் செந்தில்குமார் தனது தாய் தந்தையை பார்க்க அடிக்கடி ஊருக்கு சென்று வருவது வழக்கமாம். இந்நிலையில் நேற்று (நவ.28) செந்தில்குமார் அவரது தாய் - தந்தை வசித்து வரும் சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் தெய்வசிகாமணி வசித்து வரும் தோட்டம் இருக்கும் சாலைக்கு வந்துள்ளார்கள்.
பின்னர் அந்த சாலை வழியாக தோட்டத்திற்குள் இருந்த தெய்வசிகாமணி வீட்டிற்குள் மின்னல் வேகத்தில் நுழைந்த அவர்கள், அங்கு வைத்து அவரை வெட்ட முயற்சி செய்துள்ளார்கள். அதை தடுக்க வந்த தெய்வசிகாமணியின் மனைவி மற்றும் மகன் செந்தில்குமாரையும் ஆயுதத்துடன் வந்த நபர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர் மூவரையும் கொன்றுள்ளனர். பின்னர் உள்ளே இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. மூவரும் ரத்த வெள்ளத்தில் வீட்டின் வாசலில் கிடந்தை அந்த வழியாக இன்று காலையில் சென்ற சவரத் தொழிலாளர் ஒருவர் பார்த்துள்ளார். அவர் உடனடியாக அவிநாசி பாளையம் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து, அவிநாசி பாளையம் காவல்துறையினர் மற்றும் பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில் தடையவியல் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் கொலை நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த 8 பவுன் நகை மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே கொலை செய்யப்பட்ட மூன்று பேரின் சடலங்களும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. விசாரணையில் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்தும், போலீசார் பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சம்பவத்தை நேரில் விசாரிக்க சென்ற போலீஸ் கமிஷனரிடம் உறவுக்கார பெண் ஒருவர் பேசுகையில், இவ்வளவு கொடூரமாக கொன்று இருக்கானுங்க.. அவனுங்களுக்கு குழந்தை, குடும்பம் என்று எதுவும் இருக்காதா என்று கண்ணீர்விட்டார். அப்போது கணவனை பறிகொடுத்த வலியில் துடித்துக் கொண்டிருந்த பெண், திடீரென எழுந்து வந்து, எனக்கு நீங்க கண்டுபிடிக்கலேனா நான் சும்மா விட மாட்டேன்.. எனக்கு அவனுங்க வேண்டும்.. கண்ணு முன்னாடி வேண்டும். என் புருஷனை தூக்கத்திலேயே வெட்டிக் கொன்ணுறிருக்கானுங்க.. என் புள்ளைக்கு ஏழு வயது தான் ஆகுது என்று கண்ணீர்விட்டபடி கூறிக்கொண்டிருந்தார்.
அப்போது ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த அந்த பெண்ணை சுற்றியிருந்த உறவினர்கள் பிடித்துக் கொண்டிருந்தனர். உடனே அவர், அவர்களை என்னை விடுங்கப்பா என்று கைளை உதறியபடி கண்ணீர் விட்டு அழுதார்.. அப்போது போலீசார் கட்டாயம் பிடித்துவிடலாம் என்று அவரை சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது அந்த பெண்.. எனக்கு தெரியாது.. இது உங்கள் பொறுப்பு.. நடந்ததற்கு நீங்க பொறுப்பு கிடையாது.. ஆனால் கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு..
உங்களால் முடியவில்லை என்றால் காவல்துறைக்கு அவமானம்.. தூங்கி கொண்டிருந்தவரை அப்படி வெட்டியிருக்காங்க மேடம்.. என் பையனுக்கு 7 வயது தான் ஆகிறது.. இன்னொரு பிள்ளைக்கு 12 வயசு ஆகிறது.. ஸ்கூலுக்கு போறாங்க.. நான் என்ன பண்ணுவேன் மேடம்.. இப்ப சொல்லுங்க.. எனக்கு உடனே நீங்கள் ஆக்சன் எடுக்க வேண்டும்... தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். ஜாமீனில் விடக்கூடாது.. ஜாமீனில் விட்டீங்கன்னா என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது.. " என்று ஆவேசமாக கூறினார்.












Click it and Unblock the Notifications