“எவ்வளவு வலி.. எவ்வளவு போராட்டம்..” - சிஎம் புகைப்படங்களைப் பார்த்து எமோஷனல் ஆன சிவகார்த்திகேயன்
திருச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றிய "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை " என்ற புகைப்படக் கண்காட்சி தற்போது திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை நடிகர் பிரபு கடந்த 23 ஆம் தேதி திறந்துவைத்தார். அவரைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகர் சிவகார்த்திகேயன் எனத் திரை நட்சத்திரங்கள் வந்து இக்கண்காட்சியைக் கண்டு சென்றுள்ளனர்.

திரை நட்சத்திரங்களின் வருகையாலும், கோடை விடுமுறை கொண்டாட்டத்தாலும் இக்கண்காட்சி களைகட்டி வருகிறது.
இந்தப் புகைப்படக் கண்காட்சி தங்களுக்கு ஏற்படுத்திய அனுபவங்களை சிவகார்த்திகேயன், பிரபு உள்ளிட்டவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
நடிகர் பிரபு: "முதல்வர் ஸ்டாலின் அண்ணன் புகைப்படக் கண்காட்சியை நான் பார்த்தேன். எனக்குச் சின்ன வயதிலிருந்து அண்ணனுடன் பழக்கம் உண்டு. ஆகவே சொல்கிறேன். இந்தப் பதவிக்கு அவர் முற்றிலும் தகுதியானவர். அவரது உழைப்பு அவ்வளவு கடினமானது.

இன்றைக்கு அவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்றால், அதற்கு அவரது அயராத உழைப்பு மட்டுமே காரணம். கழக உறுப்பினராக முதன்முதலில் உள்ளே வருகிறார். அடுத்து இளைஞரணி தலைவராக வருகிறார். அப்படியே வளர்ந்து மேயராகிறார். அடுத்து துணை முதல்வர் ஆகிறார். இன்றைக்கு மக்களின் அன்பால், முதல்வராக ஆகியிருக்கிறார்.
இப்படி வரலற்று சிறப்பு மிக்க ஒரு கண்காட்சியை என்னை வைத்துத் திறந்ததற்காக நான் அமைச்சர் கே.என்.நேருவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். அதேபோல மேயருக்கும், அமைச்சர் அன்பில் மகேஷ் அனைவருக்கும் நன்றி.

எனக்குத் திருச்சி மிக நெருக்கமான ஊர். இங்குள்ள இடத்தெரு, கண்டித் தெரு, பீம நகர், கொலைகாரன் பேட்டை இவை எல்லாம் எனக்குத் தெரியும். அந்தளவுக்கு இந்த ஊருடன் நெருங்கியவன் நான். அப்பா, கலைஞர், அன்பில் தர்மலிங்கம் எல்லாம் இங்குதான் வளர்ந்தார்கள். ஆகவே அனைத்து பகுதிகளையும் நான் அறிவேன்.
அந்தக் காலத்தில் ஷெரீஃப் என்று ஒரு மாட்டு வண்டிக்காரர் இருந்தார். அவர் மாட்டு வண்டியில்தான் நாங்கள் சின்ன பிள்ளைகளாக இருந்த போது இந்த ஊரைச் சுற்றினோம். என் மனதிற்கு நெருக்கமான ஊர் என்றால் அதுதான் திருச்சிதான்.

முதல்வர் ஸ்டாலின் மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இனியும் சிறப்பாகச் செய்வார். அவருக்கு என் அப்பாவின் ஆசி என்றைக்கும் உண்டு. கேட்கவே வேண்டாம் கலைஞரின் ஆசியும் அவருடன் கூடவே இருக்கிறது" என்கிறார்
நடிகர் சிவகார்த்திகேயன்: "நம்ம ஊர் திருச்சி. முதல்வர் ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்ததில் சந்தோஷம். வாழ்க்கையில் பெரிய இடத்தை அடைய வேண்டும் என்றால் பல வலிகளையும் தியாகங்களையும் நாம் செய்ய வேண்டும். எதுவும் எளிமையாகக் கிடைத்துவிடாது என்பதைத்தான் இக்கண்காட்சி எனக்குப் புரிய வைத்துள்ளது.

மிகப் பெரிய தலைவரின் மகனாக இருந்தாலும், நிறைய விஷயங்களைச் சந்தித்து, அதை எதிர்கொண்டுதான் இந்த இடத்திற்கு முதல்வர் வந்திருக்கிறார்.
ஒருவர் ஒருதுறையில் வெற்றிபெறுவதைப் பார்க்கும்போது அது நமக்கு உந்துதலாக இருக்கும். வாழ்க்கையில் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என்றைக்காவது ஒருநாள் பெரியதாக ஜெயிக்க முடியும் என்பதை இங்கு வந்ததன் மூலம் உணர்ந்துகொண்டேன். அதற்கு முதல்வர் ஸ்டாலின் புகைப்படங்கள் சாட்சியாக இருக்கின்றன.

சின்ன வயதில் முதல்வர் ஸ்டாலின் கையை எடுத்துக் கும்பிட்டுக் கொண்டு நிற்பதைப்போல உள்ள படம் மிகவும் பிடித்திருந்தது. அதை இதுவரை நான் பார்த்ததே இல்லை. மிசாவில் ஸ்டாலின் சிறையிலிருந்த காட்சியை அப்படியே வடிவமைத்திருந்தார்கள். அதைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். இப்போது அதைக் காட்சியாக அப்படியே பார்க்க முடிந்தது.
மேலும் அவர் ஜெயிலில் இருந்ததற்கான ஆவணங்கள் அங்கே வைக்கப்பட்டுள்ளன. அவர் மேல் போட்ட எஃப்ஐஆர் காப்பி கூட வைத்திருந்தார்கள். அதை எல்லாம் பார்த்தது புதிய அனுபவம்.

இதில் எனக்கு என்னப் பெருமை என்றால், இந்தக் கண்காட்சி நம்ம ஊரில் நடக்கிறது. நான் எங்கு எல்லாம் படிக்கும் காலத்தில் சுற்றித் திரிந்தேனோ அந்த ஊரில் நடக்கிறது. அதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை இந்தக் கண்காட்சிக்கு அழைத்த அமைச்சர் கே.என்.நேருவுக்கு என் நன்றி.
என் சிறுவயதில் அவர் எங்கள் பகுதிக்கு ஒட்டுக்கேட்டு வரும்போது பார்த்திருக்கிறேன். இன்று அவருடன் சேர்ந்து உட்கார்ந்திருக்கிறேன். சினிமா நடிகனாக இங்கே வந்திருக்கிறேன் என்பதைத்தாண்டி, ஒரு அரசு ஊழியரின் மகனாக அமைச்சர் மற்றும் மேயருடன் உட்கார்ந்து இந்தக் கண்காட்சியில் பேசிக் கொண்டிருக்கிறேன்.

என்னை அழைப்பதற்காக விமானநிலையம் வரை அமைச்சர் நேரு வந்தார். திருச்சி மேயரும் வந்தார். இந்த இருவரும் காலையிலேயே அன்பால் எனக்குப் பெரிய வரவேற்பை அளித்துவிட்டார்கள்.
இப்போது பள்ளி விடுமுறைக் காலம். ஆகவே மாணவர்கள் அதிகமாக வந்து இந்தக் கண்காட்சியைப் பார்க்கவேண்டும். அது உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் மனதில் இந்தப் புகைப்படங்கள் ஏற்படுத்தும்" என்கிறார்

ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்: "நெடுநாள் கழித்து இப்படி ஒரு கண்காட்சியைப் பார்க்கிறேன். இதைப் பார்க்கும் போது சி.எம். பற்றி ஒரு பெருமை எனக்குள் ஏற்படுகிறது. நமது முதல்வரைப் பற்றி நான் பெருமைப்படும் முதல் தருணம் இது.

அவர் தமிழ்நாட்டிற்கு முதல்வராகக் கிடைத்திருப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். நம்மைச் சுற்றி உள்ள அனைத்தும் இப்போது ஆரோக்கியமாகத் தெரிகிறது. இப்படியே தொடர்ந்தால்தான் நமக்கு அது நல்லது என நான் நினைக்கிறேன்" என்கிறார்












Click it and Unblock the Notifications