அழைப்பு விடுத்த அமைச்சர் நேரு! திருச்சிக்கு ஃபிளைட் பிடித்து பறந்த சிவகார்த்திகேயன்! என்ன பின்னணி?
திருச்சி: அமைச்சர் கே.என்.நேரு விடுத்த அழைப்பை ஏற்று தனது சொந்த ஊரான திருச்சிக்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன், அங்கு நடைபெற்று வரும் ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.
நடிகர் சிவகார்த்திகேயன் வரும் தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியதால் புகைப்படக் கண்காட்சி நடைபெற்ற இடத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது.
பவுன்சர்கள் உதவியுடன் நடிகர் சிவகார்த்திகேயனை வரவேற்று அழைத்துச் சென்ற அமைச்சர் நேரு, உள் அரங்கத்தில் புகைப்படங்களை விளக்கி கூறுவார் என்று பார்த்தால் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதிலேயே குறியாக இருந்தார்.

திருச்சியில் திமுக சார்பில் ஒரு வார காலம் நடத்தப்படும் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை நடிகர் பிரபு நேற்று முன் தினம் தொடங்கி வைத்தார்.
இதனிடையே இது குறித்து செய்தி வெளியிட்ட ஒன் இந்தியா தமிழ், ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியை திருச்சி மண்ணின் மைந்தரும், நடிகருமான சிவகார்த்திகேயன் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது என்றும் ஆனால் பிரபு அழைக்கப்பட்டிருக்கிறார் எனவும் குறிப்பிட்டிருந்தது.
நாம் இவ்வாறு செய்தி வெளியிட்ட இரண்டே நாட்களில் திருச்சி மண்ணின் மைந்தர் என்ற முறையில் நடிகர் சிவகார்த்திகேயனையும் புகைப்படக் கண்காட்சிக்கு அழைத்து அவரை பெருமைப்படுத்தியுள்ளார் அமைச்சர் நேரு.
மதுரையில் நடைபெற்ற ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியில் மதுரை மண்ணின் மைந்தர்களான நடிகர்கள் சூரி, வடிவேலு ஆகியோரை அழைத்து பெருமைப்படுத்தியிருந்தார் அமைச்சர் மூர்த்தி.
அதேபோல் கோவையில் நடைபெற்ற ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியில் கோவை மண்ணின் மைந்தரான நடிகர் சத்யராஜை அழைத்து கண்காட்சியை தொடங்கி வைக்க வைத்து பெருமைப்படுத்தினார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
இதனிடையே திருச்சியில் ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட வந்தவர்களை காட்டிலும் நடிகர் சிவகார்த்திகேயனை பார்க்கவும் அவரை புகைப்படம் எடுக்கவும் தான் அதிகமானோர் வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications