“காமராஜர், எம்ஜிஆர் சொன்னா ஓகே.. இந்த கூட்டுக் களவாணிகள் சொன்னா..?” திமுக மீது அண்ணாமலை கடும் தாக்கு
திருச்சி: கல்விக்கொள்கை பற்றி காமராஜர், எம்ஜிஆர் சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம், கூட்டுக் களவாணிகள் சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என திருச்சியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியுள்ளார்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்திடவும், 5 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயமாக்கிடவும், ஏழை மாணவர்களுக்கு சமமான கல்வியை வழங்க மறுக்கும் திமுக அரசை கண்டித்தும் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,"மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கைக்காக கையெழுத்து இயக்கம் தொடங்கி, 18 நாட்களில் 26 லட்சம் பேர் கையெழுத்திட்டு உள்ளனர். இது அரசியல் புரட்சியே. மே மாத இறுதிக்குள் ஒரு கோடியை எட்ட வேண்டும் என்பதே இலக்கு. தேசிய கல்விக் கொள்கைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. ஆனால், இதை மறைத்து திமுகவினர் அரசியல் செய்து வருகின்றனர்.
தொகுதி மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில் நடக்காது, விகிதாச்சார அடிப்படையில்தான் நடக்கும் என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் தெரிவித்தும்கூட, தேவையில்லாத ஒரு கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தியுள்ளார். கடந்த ஆண்டு தமிழகம் மட்டும் ரூ.1.62 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. மொத்தக் கடன் தொகை ரூ.9 லட்சம் கோடி ஆகும். இந்தியாவில் வேறு யாருமே இவ்வளவு கடன் வாங்கவில்லை. வரலாறு காணாத மோசமான ஆட்சிக்கு தமிழக மக்கள் 200 தொகுதிகளை எப்படி தருவார்கள்? தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கிடையாது.
மேலும் பேசுகையில்,"அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியையும் பிஎம்ஸ்ரீ பள்ளியாக மாற்றுவோம். திமுகவில் யாருமே படித்துவிட்டு அதிகாரத்திற்கு வரவில்லை. கூட்டுக் களவாணிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து, குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்ய போறாங்களாம்.
1968-ல் முதல் முறையாக தேசிய கல்வி கொள்கை வந்தது. அடுத்து 1986-ல் 2ஆம் தேசிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டது. பின்னர் 1992-ல் திருத்தப்பட்ட இரண்டாம் கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது. இதுவரை சுதந்திரத்திற்கு பிறகு 2 தேசிய கல்வி கொள்கை மட்டுமே வந்துள்ளது.
இதனால், பிரதமர் மோடி உத்தரவின் கீழ் புதிய தேசிய கல்வி கொண்டு வருவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு 2019-ல் தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை பிரதமர் மோடியிடம் சமர்ப்பித்தார்கள். அதில் மாணவர்கள் எந்த மொழியில் படிக்க வேண்டும் என இருந்தது. குழந்தைகள் தாய் மொழியில் படிக்க வேண்டும் என்றே இருந்தது.
1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் பயில வேண்டும் என தேசிய கல்வி கொள்கையில் உள்ளது. தாய் மொழியில் கல்வி கற்றதால் தான் ஜப்பான், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. அதற்காகக் தான் தேசிய கல்வி கொள்கையில் பயிற்று மொழி தமிழ் என கூறுகிறோம். இதனை திமுகவினர் கூற மாட்டார்கள்.
அதே போல, 6,7,8 ஆம் வகுப்புகளில் தமிழ் மொழியில் கற்க முயற்சி மேற்கொள்ளப்படும். தேசிய கல்வி கொள்கை வரைவில் 3வது மொழி இந்தி இருக்க வேண்டும் என இருந்தது. அதனை மாற்றி ஏதாவது ஒரு இந்திய மொழி கொண்டு வாருங்கள் என பிரதமர் மோடி கூறினார். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போதும் தேசிய கல்வி கொள்கையில் 3வது கட்டாய மொழி இந்தி தான்.
ஆனால், தற்போது மும்மொழிக் கொள்கை பற்றி பேசுபவர்கள் யார்? சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், ரவுடிகள், கள்ளச்சாராயம் விற்றவர்கள், இவங்க எல்லாம் சேர்ந்து கல்விக் கொள்கை பற்றிச் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
தேசிய கல்வி கொள்கை பற்றி கர்மவீரர் காமராஜர் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம், எம்ஜிஆர் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம், பிரதமர் மோடி சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்த கூட்டுக் களவாணிகள் எல்லாம் சேர்ந்து சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?" எனக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications