எல்லாரும் பகையாளிகள்தான்.. "அவர்களை" பாஜக பங்காளியாக எப்போதும் பார்க்காது.. அண்ணாமலை பேச்சு
திருச்சி: ஊழல் விவகாரத்தில் நண்பர்கள், எதிரிகள் என்றெல்லாம் நான் பார்க்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மக்கள் வரிப்பணத்தில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ எங்களை பொருத்தவரை யார் ஊழல் செய்கிறார்களோ அவர்களுடைய பட்டியலை வெளியிடுவதே நியாயம்.

ஊழல் விவகாரத்தில் நண்பர்கள், எதிரிகள் என்றெல்லாம் நான் பார்க்கவில்லை. இந்த விவகாரத்தில் நாங்கள் யாரையும் பங்காளிகள் என கூறுவதில்லை. எல்லோரும் பகையாளிகளாகதான். யார் ஊழல் செய்திருக்கிறார்களோ அவர்களை பாஜக பகையாளிகளாகதான் பார்க்குமே தவிர பங்காளிகளாக பார்க்காது. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கையில் விலை உயர்ந்த வெளிநாட்டு ரக வாட்ச் இருந்தது குறித்து சமூகவலைதளங்களில் பேசப்பட்டது. வெறும் 4 ஆடு மாடுகளை மேய்த்து வருவதாக சொல்லும் அண்ணாமலையிடம் இத்தனை லட்சம் மதிப்புள்ள வாட்ச் எப்படி கிடைத்தது என்ற கேள்வி எழுந்தது. சமூகவலைதளங்களில் திமுக ஐடி விங் இந்த கேள்வியை எழுப்பியது.
இந்த நிலையில் இதுகுறித்து அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில் இந்த வாட்ச் ரபேல் விமான உதிரிபாகங்களை கொண்டு தயார் செய்யப்பட்டது. இது போல் உலகில் 500 வாட்ச்கள் செய்யப்பட்டன. ஒவ்வொரு வாட்சிலும் ஒரு சீரியல் எண் இருக்கும். அந்த வகையில் நான் அணிந்துள்ள வாட்ச்சின் சீரியல் எண் 149 ஆகும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வாட்ச்க்கான பில்லை வெளியிடுமாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார். தன்னிடம் வாட்ச்க்கான பில் இருப்பதாக கூறிய அண்ணாமலை அதை வெளியிடுவது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்தான் தொடர்ந்து அந்த வாட்ச்க்கான பில் குறித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் வாட்ச்க்கான பில்லை ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியிடுவதாக தெரிவித்திருந்தார்.

அது போல் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் எனது சொத்து தகவல்களையும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடுவதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி அண்ணாமலை அந்த ரபேல் வாட்ச்சின் பில்லை வெளியிடவில்லை. இந்த நிலையில் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை ஏப்ரல் 14 ம் தேதி காலை அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.
சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில் சொத்து ஆவணங்களை எதுவும் வெளியிடாமல் ஒவ்வொரு திமுகவினரின் பெயரையும் புகைப்படத்தையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் வெளியிட்டு இத்தனை கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது அண்ணாமலை பிரஸ்மீட்டை பார்த்தால் எனக்கு பட்டிமன்ற பேச்சு போல் சிரிப்பு வருகிறது. இன்னும் 15 நாட்களுக்குள் அவர் வெளியிட்ட சொத்து மதிப்பிற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை கூறுகையில், ஆக திமுக நிர்வாகிகள் யாரும் நான் வெளியிட்ட சொத்து மதிப்போ அதில் குறிப்பிட்ட நிறுவனங்களோ பள்ளிகளோ தங்களது இல்லை என ஒருவரும் மறுக்கவில்லை. இது தொடர்பாக சிபிஐயிடம் புகார் கொடுக்க போவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications