புரட்டாசி 3வது சனி.. 'கோவிந்தா' முழக்கத்துடன் நம்பெருமாளை வழிபட ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்!
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ஆலயத்தில், புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையொட்டி, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நீண்ட வரிசையில் காத்திருந்து நம்பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதம் நம்பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இம்மாதத்தின் சனிக்கிழமைகளில் பக்தர்கள் விரதமிருந்து, நம்பெருமாளை வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம்.
அந்த வகையில், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில், புரட்டாசி மாதத்தில் வழிபடுவதற்காக பக்தர்கள் வருகை தருவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பூலோக வைகுண்டம்
இந்நிலையில், இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையான இன்று, பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில், நம்பெருமாளை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே குவிந்தனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில், அதிகாலை விஸ்வரூப தரிசனத்திற்கு பிறகு, பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

வரிசையில் பக்தர்கள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாள், சக்கரத்தாழ்வார், கிருஷ்ணர் சன்னதி, தாயார் சன்னதியில் உள்ள அணையா விளக்கில் தாங்கள் கொண்டுவந்த நெய்யை ஊற்றி வழிபாடு செய்தனர்.

பக்தர்களுக்காக வசதிகள்
வரிசையில் நின்ற வயதான பக்தர்கள் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் லட்டு வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வருகையையொட்டி கூட்ட நெரிசலின்றி வழிபாடு செய்வதற்காக ஆலய நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காத்திருந்து தரிசனம்
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான இன்று நம்பெருமாளை தரிசனம் செய்வதற்காக பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால், சில மணி நேரம் தரிசனத்திற்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இன்று மாலை வேளையில் தரிசனம் செய்வதற்கான நேரம் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications