என்ன இப்படி வெளிப்படையாக ஆதரிக்கிறார்.. இது நல்லதல்ல.. ஆளுநருக்கு திருநாவுக்கரசர் எச்சரிக்கை
திருச்சி: இந்தி, சமஸ்கிருதத்தை ஆதரித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவது ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.
திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் பால கட்டுமானப் பணிகளை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து திருநாவுக்கரசர் கூறுகையில், கடந்த 8 முதல் 9 ஆண்டுகளாக தொடர்ந்து முடிக்கப்படாமல் இருந்த பாலத்தின் பணிகள் விரைவில் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பினால் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான 66 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டு இன்றைக்கு பணிகள் நடந்து வருகின்றன.

மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி
இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் பணிகள் முழுமையாக நிறைவடையும். பால திட்டப்பணிகள் எனது தேர்தல் வாக்குறுதியில் பிரதான வாக்குறுதியாக இடம்பெற்றது. இதனை நிறைவேற்ற ஒத்துழைப்பு அளித்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

எப்படி இருக்கைகள் வழங்கப்பட்டது?
தொடர்ந்து சட்டப்பேரவையில் ஓபிஎஸ் இருக்கை விவகாரம் தொடர்பான கேள்விக்கு, அதிமுகவில் இருந்து நான் தனியாக பிரிந்து கட்சி தொடங்கிய போது, என்னுடன் 8 எம்எல்ஏ-க்கள் உடன் வந்தார்கள். அப்போது சட்டமன்றத்தில் அதிமுக ஜெயலலிதா, அதிமுக திருநாவுக்கரசர் என பிரித்து இருக்கைகள் வழங்கப்பட்டன. அதே போன்று மெஜாரிட்டி எம்எல்ஏக்களின் அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

உரிய அங்கீகாரம்
இதில் சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என எனக்கு தெரியாது. அப்படி அவர்களின் கட்சி அங்கீகாரம், சின்னம் தொடர்பாக அனைத்து முடிவும் எடுக்க வேண்டியது தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் மட்டும் தான். சட்டமன்றத்தில் இருவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுத்து உட்கார வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பாடம் நடத்த ஆளுநர் வரவில்லை
தொடர்ந்து திருக்குறள் பற்றி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு பற்றி கேள்விக்கு, ஆர்.என்.ரவி திருக்குறள், கம்பராமாயணம் என தெரியாதவற்றை எல்லாம் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் இங்கு தமிழ் பாடம் நடத்த வரவில்லை. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக இருந்து செயல்பட வேண்டிய இடத்தில் இருக்கிறார்.

நாட்டுக்கு நல்லதல்ல
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு கூடுதல் அதிகாரங்கள் இருக்கிறது. அதே நேரம் நியமிக்கப்படும் ஆளுநருக்கு குறைந்த அளவில் தான் அதிகாரங்கள் உண்டு. அதை விடுத்து மொழி பற்றி பேசுவது, இந்தி, சமஸ்கிருதத்தை ஆதரித்து பேசுவது உள்ளிட்ட செயல்கள் அவருக்கும், ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல என்று விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications