ஆயுள் கெட்டி.. மணப்பாறையில் ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி! மறுபிறவி எடுத்தது எப்படி? பரபர தகவல்
திருச்சி: திருச்சியில் சரக்கு ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி ஒருவர் எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி மறுபிறவி எடுத்து வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா முழுவதும் ரயில் நிலைய பகுதிகளில் சிலர் மிகவும் அலட்சியமாக நடமாடுவது உண்டு. அதாவது ஓடும் ரயில் ஏறுவது, நிறுத்தப்பட்ட ரயிலுக்கு அடியில் குனிந்து மறுபுறம் செல்வது, ரயில்வே கேட் மூடப்பட்டாலும் கூட அதனை கடந்து செல்வது என பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட நேரங்களில் சில எதிர்பாராத விபத்துகள் நடக்கிறது. இதனால் சிலர் மரணமடைந்துள்ள நிலையில் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் எப்படி கவனமாக செயல்பட வேண்டும் என்பது பற்றி ரயில்வே அமைச்சகம் விழிப்புணர்வுகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறது.
ஆனாலும் கூட பலரும் இதனை காதில் வாங்கி கொள்ளாமல் தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான் இன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் சரக்கு ரயிலுக்கு அடியில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அங்கு என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையத்துக்கு தினமும் 50க்கும் அதிகமான ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் வரும்போது அதற்கு வழிவிடும் வகையில் சரக்கு ரயில்கள் மற்றொரு தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கமான நடைமுறையாக உள்ளது. அதேபோல் இன்று காலையில் சரக்கு ரயில் ஒன்று தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
அப்போது சரக்கு ரயிலின் அடியில் நுழைந்து மறுபுறத்துக்கு சிலர் சென்றனர். இதனை பார்த்த மூதாட்டி ஒருவரும் சரக்கு ரயிலின் அடியில் சென்று மறுபுறம் செல்ல முயன்றார். இந்த வேளையில் எதிர்பாராத விதமாக சரக்கு ரயில் புறப்பட்டது. இதனால் அந்த மூதாட்டி பதறிப்போனார். இதை அங்கிருந்த ரயில்வே ஊழியர் மற்றும் மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவர்கள் தண்டவாளத்தில் அப்படியே படுத்து விடும்படி கூறினர். இதை கேட்ட மூதாட்டி தண்டவாளத்தில் அப்படியே படுத்து கிடந்தார். சரக்கு ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. இதற்கிடையே ரயில்வே ஊழியர் உடனடியாக என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் ரயிலை நிறுத்தினார்.
இதையடுத்து மூதாட்டி தண்டவாளத்தில் இருந்து எழுந்து மறுபுறம் சென்றார். அந்த மூதாட்டி எந்த காயங்களும் இன்றி உயிர் தப்பி மறுபிறவி எடுத்தார். இதற்கிடையே மூதாட்டி ரயில் தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications