வைகோவுக்கு 82 வயதா? 28 வயதா? என்ற சந்தேகம் வருகிறது.. திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருச்சி: மதிமுக பொதுச் செயலர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார். அப்போது, வைகோவின் நெச்சுரத்தையும், உறுதியையும் பார்க்கும்போது அவருக்கு 82 வயதா அல்லது 28 வயதா என்று நமக்கெல்லாம் சந்தேகம் வருகிறதுஎன்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி திருச்சியில் இருந்து மதுரைக்கு சமத்துவ நடைபயணத்தை வைகோ மேற்கொள்கிறார். 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது இந்த நடைபயணத்தில் தினந்தோறும் 17 கிலோ மீட்டர் வரை வைகோ நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நடைபயணத்தை முதல்வர் திருச்சியில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நடைபயணத் தொடக்க விழாவில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
82 வயதா அல்லது 28 வயதா?..
இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தன்னுடைய பொது வாழ்க்கையில் தமிழ்நாட்டில் தன் காலடி படாத இடமே இல்லை என்கிற வகையில் நடைபயணம் மேற்கொண்டவர் வைகோ. அவருடைய நெச்சுரத்தையும், உறுதியையும் பார்க்கும்போது அவருக்கு 82 வயதா அல்லது 28 வயதா என்று நமக்கெல்லாம் ஆச்சரியப்படத் தோன்றுகிறது.
இளைஞருக்குடைய வேகத்தையும், உத்வேகத்தையும், ஊக்கத்தையும் இன்று வைகோவிடம் நாம் பார்க்கிறோம். இளைஞருக்கு நல்வழி காட்டிட, இளைஞரோடு ஒன்று சேர்ந்து நடைப்பயணத்தை தொடங்குகிற வைகோவுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள். திராவிட இயக்கத்தைப் பொருத்தவரைக்கும் காலம்தோறும் இளைஞருடைய நலனுக்காகவும், எதிர்கால நன்மைக்காகவும், அவர்களுடைய வளர்ச்சிக்காகவும் செயலாற்றக்கூடிய இயக்கமாக நம்முடைய இயக்கும் இருந்து கொண்டிருக்கிறது.
பெரியார் வழிவந்த கலைஞர்
தள்ளாத 92 வயதில் தளராமல் தொண்டு செய்தவர் தந்தை பெரியார். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் கல்வி உள்பட எல்லா உரிமைகளையும் பெற்றிட கிடைக்க வேண்டும் அதற்கு சாதி மத தடைகள் அகற்றப்பட வேண்டும் என்று தனது இறுதி மூச்சுவரையும் பாடுபட்டவர். அவருடைய வழிவந்த கலைஞர் 80 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தமானவர்.
சக்கர நாற்காலியில் உட்கார்ந்த வண்ணம் ஓய்வில்லாம் உழைத்தார். 16 வயதில் மாணவநேசன் பத்திரிகை ஆரம்பித்து இளைஞர்களிடம் உரையாடியவர், 89 ஆவது வயதிலும் பேஸ்புக், ட்விட்டரில் இளைஞர்களிடம் அரசியல் செய்தார். அப்படிப்பட்ட திராவிட இயக்க யுனிவர்சிட்டியில் படித்தவர் வைகோ. நானும் அதே யுனிவர்சிட்டி மாணவன் தான். கலைஞருக்கு அருகே இருந்து அரசியல் கற்றவர் வைகோ.
நெஞ்சை விட்டு அகலாத தலைவர்
கலைஞர் பற்றி பேசும்போதெல்லாம் இமைப்பொழுதும் நம் நெஞ்சை விட்டு அகலாத தலைவர் என்று வைகோ கூறுவார். அப்படிப்பட்ட கலைஞர் மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு நடைபயணம் மேற்கொண்டபோது கூடவே நடந்தவர் வைகோ. இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் படையுடன் வைகோ நடைபயணம் மேற்கொள்கிறார். இவர்கள் அனைவரையும் வைகோவே தேர்வு செய்துள்ளார்.
இளைஞர்கள் பெற்றோர் சம்மதத்துடன் நடைபயணத்தில் பங்கேற்கின்றனரா, கல்லூரி படிப்பு பாதிக்கப்படுமா, உடல்திறன், மன உறுதி, ஆர்வம் என எல்லாவற்றையும் உறுதி செய்துவிட்டே இந்த இளைஞர் படையை வைகோ தேர்ந்தெடுத்திருக்கிறார். போதைப் பொருள் ஒழிப்பு, சாதி மத மோதல் தடுப்பு போன்ற கருத்துகளை வலியுறுத்தி தொடங்கப்பட்டுள்ள இந்த நடைபயணம் மாபெரும் வெற்றி பெற வேண்டும். நிச்சயமாக வெற்றி பெறும்.
போதைப்பொருள் ஒழிப்பு
காந்தி, மாவோவின் நடைபயணம் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தியது போல, இப்படியான நடைபயணங்களில் தான் தலைவர்கள் மக்களிடம் தங்களது கருத்துகளை நேரடியாக சொல்ல முடியும். அப்போது தான் அதில் உள்ள நியாயங்களை மக்கள் பேச ஆரம்பிப்பார்கள். போதைப் பொருள்களை நாம் நிச்சயமாக ஒழிக்க வேண்டும். அதில் எந்த கருத்து மாறுபாடும் இல்லை.
போதையின் பாதையில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற அரசு பல்வேறு நடடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் மூலம் பலனும் கிடைத்து வருகிறது. போதைப் பழக்கத்துக்கு பழக்கமானவர்கள் அதன் பாதிப்பை உணர்ந்து கைவிட வேண்டும். கூட இருப்பவர்கள் அவர்களை திருத்த வேண்டும். போதைப் பொருள் பழக்கம் என்பது பெரிய நெட்வொர்க். அந்த நெட்வொர்க்கை அழிக்க மாநிலம், ஒன்றிய அரசு இணைந்து செயல்பட வேண்டும்.
போதை நெட்வொர்க்
நாட்டுக்குள் ஏராளமான போதை வஸ்துகள் வருகின்றன. அவை எந்தெந்த துறைமுகங்கள் மூலமாக வருகிறதென்று செய்திகளில் பார்க்கிறோம். இந்த நுழைவு வாயில்களை நாம் அடைக்க வேண்டும். மாநிலம் விட்டு மாநிலம் போதைப் பொருள்கள் கட்டத்தப்படுவதை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும். அதற்கு எல்லா மாநில அரசுகளும் தேவையான ஒத்துழைப்பு தர வேண்டும்.
கடந்த சில மாதங்களில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து 1 லட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளை பிடித்திருக்கிறோம். இந்த கடத்தலில் பிடிபட்டவர்கள் மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். நைஜீரியா, செனகல் போன்ற நாட்டினரும் பிடிபட்டுள்ளனர். இந்த நெட்வொர்க்குகளை ஒழிக்க அனைவரும் கைகொடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications