“கமிஷன்” வாங்கிய அண்ணாமலை.. காயத்ரியே சொல்லிட்டாரே! ஊழல் பற்றி பாஜக பேசலாமா -ஜெய்னுல் ஆபிதீன் கேள்வி
திருச்சி: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசு திட்டங்களுக்கு கமிஷன் வாங்கியதாக காயத்ரி ரகுராமே தெரிவித்துள்ள நிலையில் ஊழல் பற்றி பாஜக பேசக்கூடாது என தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் தெரிவித்துள்ளார்.
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் சார்பில் நபிகள் நாயகம் குறித்து விளக்கும் வகையில் சிறப்பு மாநாடு ஜனவரி 8ஆம் தேதி திருச்சி செம்பட்டு அருகே நடைபெற உள்ளது.
இது குறித்த செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி சிங்காரத்தோப்பு அருகே மாவட்ட துணைத் தலைவர் ரபி அஹமது தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதன் நிறுவனத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் கலந்துகொண்டார்.

அண்ணாமலை பேசலாமா?
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ஆட்சியில் இல்லாதபோதே அண்ணாமலை மத்திய அரசு திட்டங்களை அமல்படுத்துவதற்கு எங்கெங்கு கமிஷன் வாங்கினார் என்ற பட்டியலை வெளியிடுவேன் என்று காயத்ரி ரகுராம் சொல்கிறார்.

ரஃபேல் ஊழல்
ஊழலைப் பற்றி அண்ணாமலை பேசக்கூடாது. அவரது கட்சியில் உள்ளவர்களே அவர் மீது ஊழல் புகார் சுமத்தும்போது அவர் எப்படி ஊழலை பற்றி பேச முடியும்? உலகத்திலேயே பெரிய ஊழல் என்றால் அது ரஃபேல் ஊழல்தான். எனவே பாஜக ஊழலை பற்றி பேச முடியாது." என்று தெரிவித்து இருக்கிறார்.

பாஜக வெற்றி
குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றது பற்றி பேசிய அவர், "குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்த தொகுதியில் பாஜக அதிக வாக்கு பெற்று உள்ளது என்றால், இந்த வெற்றி சந்தேகத்திற்குரியது. ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமித்து உள்ளனர். அதுவும் அவர் பணி நிறைவு பெறும் ஒருநாளைக்கு முன்பாகவே நியமித்து உள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு
வாக்குச்சீட்டு முறை தான் சரியான தீர்வாகும். இயந்திரத்தின் மூலம் குறிப்பிட்ட நபர்களை வெற்றிபெற செய்திட முடியும். எனவே இது 2024 தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கை. முஸ்லிம்களுக்கு பாபர் மஸ்ஜித் வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை என்றாலும் அந்த அநியாயத்தை யாரும் மறந்து விடக்கூடாது என்பதற்காக சில அமைப்புகள் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை
சிறுபான்மையினருக்கு வழங்கி வரும் உதவித்தொகை பல்வேறு வகையில் நிறுத்தப்பட்டு வருகிறது. முஸ்லிம்களை புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பாஜகவின் வேலூர் இப்ராஹிம் பொது சிவில் சட்டம் குறித்து பேச தயார் என்று கூறினார். நாங்கள் பல ஆண்டுகளாக விவாதிப்பதற்கு அழைப்பு விடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். யாரும் வரவில்லை.

விவாதத்துக்கு அழைப்பு
வேலூர் இப்ராஹிம் வந்தாலும் அவர் பாஜகவின் சார்பில் வர வேண்டும். அல்லது மோடி, அமித்ஷா உட்பட யார் வந்தாலும் பாஜகவின் சார்பில் வர வேண்டும். அந்த விவாதத்தில் தோற்றுப் போனால் பாஜகவின் சார்பில் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். நாங்கள் பொது சிவில் சட்டம் பற்றி விவாதிக்க தயார்." என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications