கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்
திருச்சி: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த 3 வாரங்களிலேயே அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். நாங்கள் முதல்முறை எம்எல்ஏ ஆகியுள்ளோம். எங்களுக்கு சற்று அவகாசம் கொடுங்கள் என்று ரமேஷ் பேசியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், ஶ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவுமான ரமேஷ் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், "வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. உங்களின் கோரிக்கைகள், குறைகள், பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதை ஒரு கடிதத்தில் விண்ணப்பமாக எழுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொடுங்கள்.

முதல்முறை எம்எல்ஏக்கள்
அதை பார்த்து நடவடிக்கை எடுக்க நாங்கள் உறுதுணையாக இருப்போம். இதற்கு முன்பிருந்த எம்எல்ஏக்கள், அமைச்சர்களை போல உங்களை சந்திக்காமல், பார்க்காமல், உங்கள் குறைகளை கேட்காமல் ஓடி ஒளிய மாட்டோம். நாங்களே தேடி தேடி உங்கள் வீட்டிற்கு வந்து குறைகளை கேட்போம். நிச்சயமாக இதை செய்து முடிப்போம். நிறைய மனுக்கள் வந்துள்ளன. அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம்.
இப்போது தான் ஆரம்பித்துள்ளோம். அதனால் கொஞ்சம் நேரம் கொடுங்கள். நாங்கள் எல்லாம் முதல்முறை எம்எல்ஏக்கள். இதற்கு முன்பு எம்எல்ஏவாக இருந்ததில்லை. எங்கள் குடும்பத்தில் அரசியல் என்றால் யாருக்கும், எதுவும் தெரியாது. நாங்கள் தான் முதலில் அரசியலுக்கு வந்து, முதல்முறை எம்எல்ஏ ஆகியுள்ளோம். அரசியலை கற்று கொண்டிருக்கிறோம். அதற்கு சற்று நேரம் கொடுங்கள்.
தொகுதியை முன்னேற்றி
மக்களை ஏமாற்றாமல், ஊழல் செய்யாமல் பணியாற்றுவது எப்படி என்றும் ஆலோசித்து வருகிறோம். அதற்காக கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். உங்கள் மனுக்களை விரைவாக மேலே கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம். நீங்கள் எல்லோரும் எங்களுக்கு ஓட்டு போட்டதை நினைத்து பெருமைப்படுமளவுக்கு எங்கள் பணிகள் இருக்கும். தொகுதியை முன்னேற்றிக் காட்டுவது எங்களின் கடமையாக இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications