வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி.. பாய்ந்தது வழக்கு
திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினரான என்.ஆர்.என்.பாண்டியன் மீது அவரது வீட்டில் வேலை பார்த்த பெண் பாலியல் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்த மணிமேகலை என்ற பெண், தனது கணவர் இறந்துவிட்ட நிலையில், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வறுமை காரணமாக அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.என்.பாண்டியன் வீட்டிலும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், தன் வீட்டில் வேலை செய்து வந்த மணிமேகலைக்கு என்.ஆர்.என்.பாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதையடுத்து, என்.ஆர்.என்.பாண்டியன் மீது போலீசில் புகார் அளித்தார் மணிமேகலை. ஆனாலும், போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும், என்.ஆர்.என்.பாண்டியன் தரப்பினர் அப்பெண்ணுக்கு கொலை மிரல்ல் விடுத்துள்ளனர். இதையடுத்து, தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் போலீஸ் பாதுகப்பு வழங்க வேண்டும் என்றும், விஷ்வ இந்து பரிஷத் பிரமுகர் பாண்டியன் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணையில் உள்ளது என்றும் விரைவில் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவர் ஆதரவற்ற விதவை என்பதால் பாலியல் தொல்லை கொடுத்த அரசியல் பிரமுகர் தற்போது கொலை மிரட்டல் விடுத்து வருவதால் அவர் மீது விரைவாக வழக்கு பதிந்து உரிய நடவடிகை எடுக்க வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, பாலியல் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானதாக உள்ளது. புகார் குறித்து ஏன் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவில்லை என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார். அப்போது காவல்துறை தரப்பில், உடனடியாக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார் நீதிபதி.
இந்நிலையில், பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கொலை மிரட்டலும் விடுப்பதாக, வீட்டு வேலை செய்த பெண் அளித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினரான என்.ஆர்.என்.பாண்டியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications