ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை.. திருச்சியில் பரபரப்பு
திருச்சி: திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே ரவுடி கொம்பன் ஜெகன் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பல வழக்குகளில் தொடர்புடைய கொம்பன் ஜெகனை பிடிக்க முயன்ற போது காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றதால் கொம்பன் ஜெகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக் குறிச்சி மேல தெருவை சேர்ந்த கொம்பன் ஜெகன் (எ) ஜெகதீசன்,29 இவன் மீது பல கொலை வழக்குகள் உள்ள நிலையில், கூலிப்படையாகவும் செயல்பட்டு வருவதுடன் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கடந்த மே மாதம் 19ஆம் தேதி ஜெகன் தனது பிறந்தநாள் விழாவையொட்டி திருச்சி பகுதியில் போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர். சொந்த ஊரில் வான வேடிக்கை முழங்க கார் மீது அமர்ந்து ஊர்வலம் சென்றான். பின்னர் நண்பர்கள் மத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினான்.
இந்த பிறந்தநாள் விழாவில் ஜெகனுடன் தொடர்புடைய பல ரவுடிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து 20ம் தேதி இரவு பிறந்தநாள் விழா விருந்து என அவனது கூட்டாளிகளுக்கு கிடா கறியுடன் ஜெகன் வீட்டில் விருந்து கொடுத்தான். அப்பொழுது அவனது கூட்டாளிகள் அரிவாள், கத்தி, உள்ளிட்ட ஆயுதத்துடன் வந்து அந்த விருந்தில் கலந்து கொண்டனர். இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகன் மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்தனர்.
கைது செய்து போலீசார் வாகனத்தில் அழைத்து சென்றப்போது போலீசார் வாகனத்தில் கண்ணாடியை ஜெகன் தலையில் மோதிகொண்டு அடம் செய்து உள்ளான். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜெகனின் பிறந்தநாள் விழாவிற்காக நண்பர்களுக்கு விருந்து கொடுத்ததாகவும், மேலும் செலவுக்கு காசு வேண்டுமென்றும் அதற்கு என்ன செய்யலாம் என்று திட்டம் போட்டு கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 10 பேரையும் திருவெறும்பூர் போலீசார் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளி வந்த கொம்பன் ஜெகன் திருந்தி வாழ நினைப்பதாக கூறி வந்தார்.
பல வழக்குகளில் தொடர்புடைய கொம்பன் ஜெகனை காவல்துறையினர் தேடி வந்தனர். கொம்பன் ஜெகன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்படி திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே இருந்த ரவுடி கொம்பன் ஜெகனை போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது ரவுடி கொம்பன் ஜெகன் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதனால் தற்காப்புக்காக போலீசார் ரவுடி கொம்பன் ஜெகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல் உதவி ஆய்வாளர் வினோத்தை தாக்கிவிட்டு ரவுடி கொம்பன் ஜெகன் தப்ப முயன்ற போது போலீசார் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
என்கவுன்ட்டர் சம்பவத்தில் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் வினோத் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார். பல்வேறு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் திருச்சி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications