தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இருக்கிறது என ரஜினிகாந்த் கூறுவது தமிழர்களை அவமதிப்பதாகும்: சீமான்
Recommended Video
திருச்சி: தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இருக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது தமிழர்களை அவமதிப்பதாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
அரசியலுக்கு திடீர் என வருவதற்கு நடிப்பது மட்டுமே தகுதியாகிவிடாது. இங்கே ஆகப் பெரும் தலைவர்கள் பலரும் இருக்கின்றனர்.
நல்லகண்ணுவை தாண்டிய ஒரு தலைவர் இந்த நிலத்தில் யாரும் இல்லை. நடிப்பது மட்டுமே நாடாள்வதற்கான தகுதி ஆகிவிடாது. ராணுவ வீரன் ஓய்வு பெற்றால் வாயிற் காவலனாகி விடுகிறான்.

ஓய்வு பெற்றால் முதல்வர் பதவி
ஆனால் நடிகன் ஓய்வு பெற்றால் நாட்டை ஆள்கிற முதல்வர்களாகிவிடுகின்றனர். நீண்டகாலமாக அரசியலில் இருந்து வரும் நடிகர்கள் பற்றிய கருத்து வேறு. ரஜினிகாந்த் படத்தை தேடி செல்கிறார்.

தேர்தலில் போட்டியிடுங்க
அரசியலுக்கு வந்தால் முதலமைச்சர் பதவி என்கிற நிலையுடன் வருகின்றனர். நீங்கள் வேண்டுமானால் இடைத்தேர்தலில் போட்டியிடுங்க.. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிடங்கள் இருக்கிறதே அதில் போட்டியிடுங்க.

ஆளுமை இதுதான்
ஆளுமை என ரஜினிகாந்த் சொல்வதை நான் ஏற்க முடியாது. ஆளுமை என்பது முக வலிமை அல்ல. மொழி, இனம், நிலம், வளம் அத்தனையையும் சார்ந்தது ஆளுமை. தன்னை அனைவருக்கும் தெரியும் என்பதாலே ஆளுமை என்றாகிவிடாது.

தமிழினத்தை அவமதிக்கிறீர்கள்
அளப்பரிய தியாகங்களும் அர்ப்பணிப்புகளும்தான் தேவை. ஆளுமையான தலைவர் இல்லை என்று பேசுவதே தமிழர்களை அவமதிப்பதாகும். உங்களை வாழ வைத்த இனத்தை அவமதிக்கிறீர்கள். உலகத்தையே கட்டி ஆண்ட இனமக்களில் ஒருவருக்கு கூட ஆளுமை இல்லை என்று கூறுவதா?

ஆளுமை என்ன?
பேரறிஞர்களும் பெரும்பெரும் சான்றோர்களும் பிறந்த மண் இது. அளப்பரிய ஆற்றலோடு இளைஞர்கள் உள்ளனர். அவர்களை குறைத்து மதிப்பிடுவது போல் ஆளுமை இல்லை என கூறுவதா? உங்களிடம் அப்படி என்ன ஆளுமை இருக்கிறது? என சொல்ல முடியுமா?
இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications