சீமான் எந்த தொகுதியில் போட்டி..? நாளை நடக்கும் திருச்சி மாநாட்டில் 234 நாதக வேட்பாளர்கள் அறிமுகம்!
திருச்சி: சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாளை அறிமுகம் செய்ய உள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026 என்ற தலைப்பில் திருச்சியில் நாளை நாதக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தான் போட்டியிடும் தொகுதியையும் அறிவிக்க உள்ளார் சீமான்.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 2016 ஆம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, அதன் பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது.

2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 1.07 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளை பெற்றது. தொடர்ந்து நடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 6.58 ஆக உயர்ந்த அக்கட்சியின் வாக்கு சதவீதம், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 8.2 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில், வரும் சட்டசபை தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்தே எதிர்கொள்ள இருக்கிறது என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்துவிட்டார். பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார் சீமான். நாம் தமிழர் கட்சி சார்பில் ஏராளமான தொகுதிகளில் வேட்பாளர் அறிமுகக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களின்போது வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நாம் தமிழர் கட்சி பிரமாண்டமாக நடத்துவது வழக்கம். அந்தவகையில் எதிர்வரும் சட்டசபை தேர்தலையொட்டி திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கிறது அக்கட்சி. இந்த மாநாட்டில் வேட்பாளர் அறிமுகக் கூட்டமும் இணைந்து நடப்பதால் 234 வேட்பாளர்களையும் மேடையேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி வாரியாக அறிவித்துவிட்டு இறுதியாக, தான் போட்டியிடும் தொகுதியையும் சீமான் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், "மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான மாநாடு 21ஆம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. நாம் தமிழர் கட்சியின் மாநாடு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். மாநாட்டில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய சீஆன், "தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் கடன் வாங்கி நிறைவேற்றப்பட்டவை. இந்த மாதிரியான ஆட்சி முறையை தான் எதிர்பார்க்கிறீர்களா? 5,000 ரூபாயை நாங்க கேட்கவில்லையே.. இதனை எதைவைத்து கட்டுவீங்க? யாரு காசு இது? அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிகள், கல்லூரிகளில் தரம் இல்லை. எந்த மக்கள் பிரதிநிதியின் குழந்தைகள் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்றனர்?" எனக் கேள்வி எழுப்பினார் சீமான்.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பல்வேறு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டனர். அதன்படி, கட்சியின் இளைஞர் பாசறை பொறுப்பாளர் எ.சரண்யா எழும்பூர் தொகுதியிலும், சுற்றுச்சூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா தாயுமானவன் ஆர்.கே.நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் மு.களஞ்சியம் ஆயிரம் விளக்கு தொகுதியிலும், வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் சி.சங்கர் அண்ணாநகர் தொகுதியிலும், இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பெனஷான் ஷெரிப் துறைமுகம் தொகுதியிலும், தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர் கீர்த்தனா வேளச்சேரியிலும், ஆ.பாபுமைலன் ராயபுரம் தொகுதியிலும், சமூக ஆர்வலர் ரோஷினி வில்லிவாக்கத்திலும் போட்டியிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications