புதர்பகுதியில் நடந்த அதிசயம்.. "கல்செக்கு" தெரியுமா.. நெடுமலையில் என்ன நடந்தது.. வாயை பிளந்த திருச்சி
நெடுமலையில் செக்குகல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
திருச்சி: முட்புதர்களுக்கு இடையே பாறையில் கண்டெடுத்த பொக்கிஷம் ஒன்று திருச்சி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
திருச்சி- திண்டுக்கல் சாலையில் புங்கனூர் பஞ்சாயத்தை சேர்ந்தது நெடுமலை என்ற கிராமம்... இங்கு வாடிவாசல் கருப்பு கோவிலுக்கு அருகே களத்துமேட்டு பகுதி ஒன்று உள்ளது..
இங்குள்ள முட்புதர்களுக்கு இடையே பாறையில் செக்கு கல்வெட்டு எழுத்துப் பொறிப்புடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நெடுமலை கிராமம்
நெடுமலை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர்தான் இந்த கல்வெட்டை முதன்முதலில் பார்த்தார்.. உடனடியாக போலீசுக்கும் தகவல் தந்தார்.. அதன்பேரில், திருச்சியை சேர்ந்த பள்ளி முதல்வர் பாலபாரதி, போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாணிக்கராஜ், வரலாற்று ஆசிரியர் கருப்பையா, தாயனூர் பழனியாண்டி, கொத்தமங்கலம் சத்யசீலன் ஆகியோர் கொண்ட குழுவினர் கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தனர்.

பானைக்குழி
அந்த கல்வெட்டு மொத்தம் 76 சென்டிமீட்டர் வெளிவிட்டமும், 48 சென்டி மீட்டர்உள்விட்டமும் கொண்டது.. இந்த செக்கானது 13 சென்டி மீட்டர் விட்டத்தைக் கொண்ட துளையுடன் காணப்பட்டது... ஒரு அடி ஆழத்தில் உட்புறம் பானைப்போன்ற குழியுடன் எண்ணெய் ஆட்டுவதற்கான அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செக்கில் 3 வரிகளுடன் கூடிய எழுத்துகளைக் பதித்துள்ளனர். எழுத்துப் பொறிப்பின் அடிப்படையில் இந்த செக்கு கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தெரியவந்தது.

கல்செக்கு
மேலும் செக்கிற்கு வடமேற்கே 150 அடித் தொலைவில் உள்ள மற்றொரு பாறையில் தலை உடைக்கப்பட்ட அய்யனார் சிற்பமும் இருந்தது. பழங்காலங்கல், எண்ணெய் வித்துக்களை ஆட்ட ஊருக்கு பொதுவாக கல்செக்கு செய்து தருவது வழக்கம்... அதாவது, நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்களை இந்த உரலில் ஆட்டி எண்ணெய் எடுத்து அந்த கால மக்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்..

கல்வெட்டு
பொதுவாக திருச்சியில் செக்கு கல்வெட்டுகள் அதிகம் கிடைக்காத நிலையில் இந்த செக்கு கல்வெட்டு முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. இதன் பழமையையும், வரலாற்றுச் சிறப்பையும் கருதி இதைப் பாதுகாக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சின்னங்கள் தமிழகத்தின் வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது என்றும் பள்ளி முதல்வர் பாலபாரதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications