மாணவி பலாத்காரம்.. கைதானவர் அமைச்சர் அன்பில் மகேஷின் டிரைவர் இல்லை.. திருச்சி எஸ்பி விளக்கம்
திருச்சி: தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் டிரைவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் பாஜகவை சேர்ந்த தலைவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் அதனை திருச்சி எஸ்பி முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் அமைச்சர் அன்பில் மகேஷின் டிரைவர் இல்லை எனவும் திருச்சி எஸ்பி வருண் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் அன்பில் மகேஷ். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏவாக தேர்வாகி அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் அன்பில் மகேஷ் நிர்வகித்து வரும் பள்ளி கல்வித்துறை என்பது தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. ஆசிரியர்கள் போராட்ட விவகாரம் ஒரு புறம் இருக்க மகாவிஷ்ணு விவகாரம் பற்றி எரிந்து வருகிறது.
இதுதவிர புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழக அரசு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் இருக்கும் விவகாரமும் பூதாகரமாகி உள்ளது. இந்நிலையில் தான் புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்காதது தொடர்பாக நாளிதழ்களில் வந்த செய்திகளை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்டு இருந்தார்.
மேலும் அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின், "புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்ததாக சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுப்பது, அதேவளையில் இலக்குகளை நிர்ணயம் செய்யாதவர்களுக்கு பரிசு அளிக்கப்படுகிறது. தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேற்படுத்த மத்திய பாஜக அரசு இப்படித்தான் திட்டமிடுகிறதா?" என தெரிவித்து இருந்தார்.
இந்த பதிவுக்கு தமிழக பாஜக தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வக்குமார், ‛‛முதல்வர் இன்னொரு திசைதிருப்பும் தந்திரத்தை கையில் எடுத்துள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றம் அவரது தவறான செயல்பாடுகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைத்திருப்ப முதல்வர் கடுமையாக முயற்சிக்கிறார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனை வீடியோ எடுத்து மாணவியை மிரட்டி மிரட்டி மீண்டும் மீண்டும் துன்புறுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தும் அமைச்சரின் டிரைவர் சம்பந்தப்பட்டுள்ளதால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த குற்றச்சாட்டுகளை மறைப்பதில் போலீஸ் சூப்பிரண்டு மும்முரமாக இருந்து வருகிறார்'' என விமர்சனம் செய்துள்ளார்.

அதாவது 17 வயது கல்லூரி மாணவி திருச்சி சூப்பிரண்டு அலுவலகத்தில் செப்டம்பர் 3ம் தேதி புகார் ஒன்றை வழங்கினார். அதில், சிலம்பரசன் என்பவர் அமைச்சர் அன்பில் மகேஷின் டிரைவர் எனக்கூறி என்னிடம் பழகினார். சிலம்பரசன் என்னை அவரது வீடு, தோட்டம் உள்பட பல இடங்களுக்கு அழைத்து சென்றார். தனது 5 நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தார். மேலும் அதனை வீடியோ எடுத்து மிரட்டினர். ஆசைக்கு இணங்காவிட்டால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினர். 20 நாட்களுக்கு முன்பு மாத்திரை வாங்கி கொடுத்ததோடு, பணம் வழங்குவதாக தெரிவித்தார் என கூறினார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தான் தற்போது திருச்சி எஸ்பி வருண்குமார் விளக்கம் அளித்துள்ளார். அதில், "சிலம்பரசன் என்பவர் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஓட்டுநர் அல்ல. மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தை பாதிக்கப்பட்ட பெண் அணுகிய அன்றே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பிவிட்டோம்.
மேலும் திருச்சி என்ஐடி விவகாரத்திலும் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தோம். சாம்சன் டேனியல் வழக்கு திருச்சி மாநகர காவல்துறைக்கு கீழே வரும் வழக்கு. குற்றவாளியும் அவரது தாயும் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் எவையும் மறைக்கப்படவில்லை. துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைதுசெய்துள்ளோம்." என கூறியுள்ளார். இதன்மூலம் பாஜக பிரமுகர் செல்வக்குமார் கூறிய குற்றச்சாட்டு தவறானது என்பது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications