தலைநிமிறுது திருச்சி.. திணறடித்த திருநாவுக்கரசர்.. துரைமுருகன் சொன்னதுமே ஓடி வந்துட்டாரு.. நடக்குமா
சென்னை: திருச்சியை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்.
திருச்சியை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் ஆவார்.. 2 வருடங்களுக்கு முன்புகூட, இதே கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார்.

எம்ஜிஆர்: திருச்சியை 2வது தலைநகரமாக்க வேண்டுமென்கிற கோரிக்கையை எம்ஜிஆருக்குப் பிறகு முதன்முதலில் நான்தான் அரசுக்கு கோரிக்கையாக வைத்தேன். திருச்சி மாநகர் தமிழகத்தின் இதயம் போல் மத்திய பகுதியாக விளங்குவதாகும். கன்னியாகுமரி முதல் தமிழகத்தின் 4 எல்லைகளில் இருந்தும் திருச்சிக்கு சுமார் 4 மணி நேரத்தில் சாலை வழியாக வந்து சேர்ந்துவிட முடியும்.
சென்னையின் நெருக்கடியை தவிர்க்கவும், மக்களுக்கு எளிதாக வந்து போகும் விதத்திலும் அரசின் பல்வேறு துறைகளின் தலைமை அலுவலகங்கள் கட்டப்படுபவை திருச்சியில் இனிமேல் கட்டப்பட வேண்டும்.. இடவசதி, தண்ணீர் வசதி, சாலை வசதி, விமான வசதி, ரயில் வசதி, கல்வி மற்றும் மருத்துவ வசதி இப்படி துணை நகரத்திற்கு தேவையான அனைத்தும் திருச்சி மற்றும் திருச்சியையொட்டியே தாராளமாக உள்ளன.
இரண்டாவது தலைநகர்: இதையெல்லாம் முதல்வராக இருந்த எம்ஜிஆர் சிந்தித்தும், அதிகாரிகள், பல்துறை விற்பன்னர்கள் அனைவரையும் கலந்தாலோசித்தும்தான் திருச்சியை இரண்டாம் தலைநகராக்க முடிவு செய்து அறிவித்தார். அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் விருப்பத்தை அவரால் நிறைவேற்ற இயலவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள திருச்சியோ, மதுரையோ, கோவையோ, கடலூரோ, நெல்லையோ, சேலமோ இப்படி நகரங்கள் அனைத்தும் முக்கியமானவையே. மற்றபடி எல்லா ஊரும் ஒன்றே மதுரையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. திருச்சியை நான் குறிப்பிடுவது தமிழ்நாட்டின் மையப்பகுதி என்பதாலும், மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டும்தான் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தவர் திருநாவுக்கரசர் ஆவார்.
துரைமுருகன்: இந்நிலையில், திருச்சியை தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக்க வேண்டும் என்ற, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறிய கருத்தை திருநாவுக்கரசர் ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து எம்பி திருநாவுக்கரசர் சொன்னதாவது:
"திருச்சியை தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக்க வேண்டும் என்ற, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் விருப்பமும் அதுதான். முதலில், திருச்சியை துணை தலைநகரமாக உருவாக்கி, பிறகு படிப்படியாக தலைநகரமாக மாற்ற வேண்டும்.. இது என்னுடைய விருப்பம்.
திமுக கூட்டணி: "இண்டியா" கூட்டணியின் தலைமை இடமாக சென்னை திகழ்கிறது. 5 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெறும். வரும் எம்பி தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச, இது சரியான நேரமில்லை.. தேர்தலுக்கு இன்னும் அவகாசம் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே, திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கூடிப்பேசி, காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள், எத்தனை தொகுதிகள் என்பதை முடிவு செய்வார்கள்.
காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நிற்பது பாஜக கிடையாது.. அமலாக்கத் துறையும், வருமான வரித்துறையும் தான்... இந்த 2 துறைகளும் யாரையும் குற்றவாளி என்று தீர்மானிக்க முடியாது. அதை நீதிமன்றம் தான் முடிவு செய்யும்" என்றார் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்.


Click it and Unblock the Notifications
