திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மின்னிய 300 கிலோ தங்கம்.. பக்கத்திலேயே துப்பாக்கியுடன் போலீஸ்
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் 300 கிலோ 675 கிராம் தங்கத்தை காணிக்கையாக அளித்திருந்த நிலையில், அவைகளின் தரம் பிரித்து, அளவீடு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 நாள் முடிந்துள்ள நிலையில், துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில், தமிழக கோயில்களில் கடந்த 10 வருடங்களில் காணிக்கையாக கிடைக்க பெற்ற தங்க ஆபரணங்களில், கோயிலுக்கு தேவைப்படுபவை தவிர, மற்றவற்றை மும்பையிலுள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்கம் உருக்காலையில் உருக்கி, அதனை சுத்த தங்கமாக மாற்றி, கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.

அறநிலையத்துறை: அத்துடன், அறநிலையத்துறை சார்பில், தமிழகம் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட், ஹைகோர்ட் நீதிபதிகள் அடங்கிய குழுவையும் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கோயில்களுக்கு சென்று, காணிக்கை தங்கங்களில் படிந்துள்ள அழுக்குகள், அரக்கு, கற்கள் போன்றவற்றை நீக்கிவிட்டு, தூய்மைப்படுத்தி தரம் பிரித்து, அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்தவகையில், சமயபுரம் மாரியம்மன் கோயிலிலும் இந்த பணிகள் துவங்கியிருக்கின்றன. சக்தி தலங்களில் சமயபுரம் மாரியம்மன் கோயில் முதன்மையாக விளங்குகிறது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வந்து செல்கின்றனர்.
அதிகாரிகள் குழு: அந்தவகையில், கடந்த செப்டம்பர் 9 தேதி முதல் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி துரைசாமி ராஜு தலைமையில், ஹைகோர்ட் முன்னாள் நீதிபதிகள் ரவிசந்திரபாபு மற்றும் மாலா ஆகியோர் முன்னிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாகவும், காணிக்கையாகவும் வரப்பெற்ற மொத்தம் 365 கிலோ தங்க நகைகளை சரிபார்ப்பு பணி தொடங்கியது.
இந்த பணிகள் 3 நாட்களுக்கு முன்பு துவங்கியபோது, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்றநீதிபதி துரைசாமி ராஜூ செய்தியாளர்களிடம், "காணிக்கையாக செலுத்தும் தங்கம் எல்லாமே, ஒரே மாதிரியான தரத்துடன் இருக்காது. எனவேதான் தரம் பிரிக்கும் பணியை துவங்கியிருக்கிறோம்.. இந்த பணிகள் முடிந்ததுமே, பாரத ஸ்டேட் வங்கிமூலமாக மும்பையில் உள்ள அரசின் உருக்காலைக்கு கொண்டுசெல்லப்படும்.. அங்கு 24 காரட் சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றி, ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்யப்படும்" என்றார்.
விறு விறு பணிகள்: தற்போது 3 நாட்கள் முடிந்துள்ள நிலையில், வரும் வாரத்திற்குள் தங்க நகைகள் சுத்தப்படுத்தும் பணிகள் அனைத்தும் முடிந்து, எஸ்பிஐ மூலம் மும்பையில் உள்ள மத்திய அரசு உருக்காலைக்கு கொண்டு சென்று உருக்கப்பட்டு, சுத்தமான தங்கமாக பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும் என்றும், இறுதியில், சுத்த தங்கத்திற்கான மதிப்பின் அடிப்படையில் தங்கப் பத்திரம் பெறப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டி கோயில் வருவாயில் சோ்க்கப்படும் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications