2வது தலைநகராகும் திருச்சி? திமுக வெளியிடப்போகும் அறிவிப்பு? கேஎன் நேரு - அன்பில் மகேஷ் ‛மூவ்'
திருச்சி: திருச்சியை தமிழகத்தின் 2வது தலைநகராக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை உள்ளது. இந்நிலையில் தான் திருச்சியை 2வது தலைநகராக்க வேண்டும் என்று அமைச்சர்கள் கேஎன் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கனிமொழி எம்பியிடம் மனு வழங்கி உள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் திமுக உள்ளது. ஒவ்வொரு சட்டசபை தேர்தலின்போது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அதிக கவனம் பெறும். திமுகவின் வெற்றிக்கு அதன் தேர்தல் வாக்குறுதிகள் பெரிய அளவில் கைக்கொடுக்கும்.

இந்நிலையில் தான் 2026 சட்டசபை தேர்தலுக்கு திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் சென்று கருத்து கேட்டு வருகின்றனர். அதன்படி திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பக்குழு கருத்துகேட்புக் கூட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று நடந்தது.
தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுத் தலைவரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான எம்.பி கனிமொழி தலைமையிலான குழுவினர் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்ட திமுக நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர். அப்போது தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சியை அறிவிக்கக் கோரியும், அரசு துறையின் ஒரு பகுதியை திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் மனு அளித்தனர். இவர்கள் 2 பேரும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் இந்த மனுவை வழங்கினர்.
இதனால் திமுக சார்பில் வெளியாகும் தேர்தல் அறிக்கையில் திருச்சி 2வது தலைநகராக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் திருச்சியில் அரசு துறை சார்ந்த பல்வேறு அலுவலகங்கள் வரும். அதுமட்டுமின்றி வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். மேலும் தமிழக மக்கள் தங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் சென்னை நோக்கி செல்ல வேண்டி இருக்காது. திருச்சியிலேயே பிரச்சனையை தீர்த்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
மேலும் இந்த கூட்டத்தில் இன்னும் சில முக்கிய மனுக்கள் வழங்கப்பட்டன. அதன்படி கும்பகோணம் தமிழ்நாடு அரசு பஸ் போக்குவரத்து கோட்டத்தை பிரித்து புதிதாக திருச்சி தமிழ்நாடு அரசு பஸ் போக்குவரத்து கோட்டத்தை உருவாக்க வேண்டும். கோவையை போல் திருச்சி அரியமங்கலத்தில் செம்மொழி பூங்காவை உருவாக்க வேண்டும். புதிதாக அரசு சித்தா மற்றும் பல் மருத்துவ கல்லூரியை அமைக்க வேண்டும் என்று பல்வேறு மனுக்கள் வழங்கப்பட்டது.
இதுபற்றி அமைச்சர் நேரு கூறுகையில், ‛‛திமுகவுக்கு எப்போதும் கதாநாயகன் தேர்தல் அறிக்கை என்று கருணாநிதி கூறுவார். வெற்றிக்கு பிரதானமாக அமையும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு கனிமொழி தலைமை வகித்து கருத்துக்களை கேட்டு வருகிறார். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருக.
நீங்கள் தரும் தேர்தல் அறிக்கையில் பிரதானமாக திருச்சி இருக்க வேண்டும். கடந்த முறை நான் வராமல் ஏமாந்துவிட்டேன். இந்த முறை ஏமாந்துவிடக்கூடாது. அதனால் முதல் ஆளாக ஓடி வந்துவிட்டேன். நாங்கள் கேட்பதை செய்து தர நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications