கிறுகிறுக்க வைக்கும் வட மாநில கும்பலின் கைவரிசை! தீரன் பட பாணியில் தட்டித்தூக்கிய திருச்சி தனிப்படை!
திருச்சி: ராஜஸ்தானிலிருந்து ரயில் ஏறி வந்து திருச்சியில் தொடர்ந்து பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டி வந்த திருட்டு கும்பல் ஒன்றை திருச்சி மாநகர் தனிப்படை தட்டித் தூக்கியுள்ளது.
நகை விற்கிற விலைக்கு நடுத்தர வர்க்கத்தினர் கஷ்டப்பட்டு நகைகளை சேர்த்து வைத்தால் நோகாமல் நொங்கு திண்கிற கதையாக ஒரே இரவில் அள்ளிக்கொண்டு சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு சென்று அங்குள்ள அவர்களது கிராமத்தில் பதுக்கி வைத்து வந்துள்ளது இந்தக் கும்பல்.
திருச்சி, திண்டுக்கல், மதுரை என மூன்று ஊர்களை சேர்ந்த போலீஸாரும் இந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தது. இதில் திருச்சி மாநகர் தனிப்படை வைத்த பொறியில் சிக்கி சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறது இந்த அடாவடி திருட்டுக் கும்பல்.

ராஜஸ்தான் மாநிலம்
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே உள்ள பொருகேடா கிராமத்தை சேர்ந்த ரத்தன், சங்கர், ராம் பிரசாத், ராமா, ஆகிய 4 பேர் கொண்ட திருட்டுக் கும்பலானது திருடுவதற்காகவே தமிழகத்திற்கு ரயில் ஏறி வருவதும் திருடிய பிறகு ஒரு நொடி கூட தாமதிக்காமல் சொந்த ஊருக்கு மீண்டும் ரயில் ஏறுவதுமாக இருந்துள்ளது. ருசி கண்ட பூனை விடாது என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு மாதம் இரண்டு மாதமல்ல பல மாதங்களாக இதே முறையில் திருச்சி, திண்டுக்கல், மதுரை என மூன்று ஊர்களிலும் பூட்டிக்கிடக்கும் வீட்டை நோட்டமிட்டு கை வரிசை காட்டியுள்ளது.

3 டீம்கள்
இரண்டு திருடன்கள் வெளியே நின்று காவல் காப்பதும் 2 திருடன்கள் வீட்டிற்குள் சென்று இரும்பு ராடால் பீரோக்களை உடைத்து நகைகள், பணங்களை அள்ளிச் செல்வதுமாக இருந்துள்ளனர். இந்தக் கும்பலை பிடிக்க திருச்சி மாநகர் தனிப்படை, திண்டுக்கல் தனிப்படை, மதுரை தனிப்படை என 3 டீம்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இதனிடையே இந்தக் கும்பல் திருச்சியில் உலவி வருவதை ஸ்மெல் செய்த திருச்சி மாநகர் தனிப்படை காவல் ஆய்வாளர் ஷியாமளா தேவி, கூண்டோடு அந்த கும்பலை தூக்கியுள்ளார்.

திருச்சி தனிப்படை
பல மாதங்களாக 3 மாவட்ட காவல்துறையினருக்கு தண்ணீர் காட்டிய திருட்டு கும்பலை பெண் காவல் ஆய்வாளர் ஷியாமளா தேவி கைது செய்ததை அடுத்து திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மற்றும் திருச்சி மாநகர தெற்கு சரக துணை ஆணையர் ஸ்ரீதேவி ஆகியோர் இன்ஸ்பெக்டர் ஷியாமளா தேவிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். பூனைக்கு யார் மணிகட்டுவது என்கிற ஆரோக்யமான போட்டியில் திண்டுக்கல், மதுரை தனிப்படைகளை காட்டிலும் திருச்சி மாநகர் தனிப்படை தீவிரமாக செயல்பட்டு பாராட்டுகளை அள்ளியுள்ளது.

பலூன் விற்பது
இதனிடையே திருட்டுக் கும்பல் தலைவனான ரத்தனிடம் திருச்சி போலீஸார் நடத்திய விசாரணையில், பலூன் விற்பது போலவும், பிச்சை எடுப்பது போலவும் சுற்றித்திரிந்து பூட்டிக் கிடக்கும் வீடுகளையும், ஆள் அரவமற்ற வீடுகளையும் நோட்டமிட்டு நகைகளை திருடி வந்ததாகவும் தமிழகத்தில் திருடிய நகைகள் அனைத்தையும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தங்கள் சொந்தக் கிராமத்தில் பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

டிக்கெட் எடுக்காமல்
மேலும், ராஜஸ்தானிலிருந்து தமிழகம் வரும் போதெல்லாம் டிக்கெட் எடுக்காமல் வித் அவுட் டிக்கெட்டில் தான் தாங்கள் பயணித்து வந்ததாகவும் ஜங்சன் பகுதியில் தங்கிக் கொண்டு வீடுகளை நோட்டமிடுவோம் எனவும் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளது அந்தக் கும்பல். இதனிடையே நகைகளை மீட்பதற்காக திருச்சி போலீஸார் நாளை இரவு ராஜஸ்தான் புறப்பட்டுச் செல்கிறார்கள்.

குவியும் பாராட்டு
பெண் காவல் ஆய்வாளர் ஷியாமளா தேவி, உதவி காவல் ஆய்வாளர் உமா சங்கரி, சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி, தலைமைக் காவலர்கள் ரவி, இன்ஸ்டின், பிரதீப், மோகன் பாபு, ஜனார்த்தனன் ஆகியோர் கொண்ட தனிப்படைக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications