41 வயது பெண்ணுக்கு 122 வயது என அச்சு பிழை.. ஆதாரில் பிறந்த ஆண்டை மாற்ற போராடும் திருச்சி பெண்
41 வயதாகும் திருச்சி பெண்ணுக்கு ஆதார் அட்டையில் 122 வயது என தவறாக குறிப்பிடப்பட்டதால் ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.
திருச்சி: 41 வயதாகும் எனக்கு 122 வயது என ஆதார் அட்டையில் பிழையுடன் இருப்பதால் அந்த தவறை சரி செய்ய முடியாமல் பெண் ஒருவர் தவித்து வருகிறார்.
மத்திய அரசு ஆதார் எனும் 12 இலக்க எண்ணை இந்திய குடிமகன்களுக்கு கட்டாயமாக்கியுள்ளது. இதை அடையாள அட்டையாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கார்டில் பயனாளியின் பெயர், முகவரி, வயது, பாலினம், போன் எண், புகைப்படம் ஆகியவை இருக்கும்.
இந்த நிலையில் இந்த ஆதார் அட்டையில் பல்வேறு தவறுகளும் அவ்வப்போது பொதுவெளிக்கு வருவதும் தவறுவதில்லை. ஆண் புகைப்படத்திற்கு பதில் பெண் புகைப்படம் போடுவது. பெண்ணுக்கு பதில் ஆண், பொதுமக்கள் புகைப்படத்தில் நடிகர், நடிகைகளின் புகைப்படம் என மாறுவதும் அதை திருத்துவதும் நடக்கிறது.

திருச்சி
அது போல் திருச்சி மாவட்டத்தில் கவிதா என்ற பெண்ணுக்கு ஆதார் அட்டை பெரும் தவறு நிகழ்ந்துள்ளது. திருச்சி மாவட்டம் தாயனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கவிதா. இவர் 1982 ஆம் ஆண்டு பிறந்தார். ஆதார் கார்டு எடுக்கும் போது கவிதாவின் ஆதார் கார்ட்டில் பிறந்த ஆண்டு தவறுதலாக அச்சடிக்கப்பட்டுவிட்டது.

1900 ஆம் ஆண்டு
அதாவது 1982 ஆம் ஆண்டு என்பதற்கு பதிலாக 1900 என அச்சிடப்பட்டு வழங்கிவிட்டனர். 41 வயது பெண்ணுக்கு 122 வயது இருப்பது போல் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவரால் எந்த ஒரு சலுகையும் பெற முடியாமல் தவித்து வருகிறார். அரசின் திட்டங்களுக்குக் கூட கவிதாவால் ஆதாரை பயன்படுத்த முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

லோன் சேவை
அது போல் வாகன லோன், தனிப்பட்ட லோன் உள்ளிட்டவைகளையும் பெற முடியாத நிலை உள்ளது. எல்லா அரசு திட்டங்களுக்கும் ஆதார்தான் அடிப்படையாக கேட்கப்படுகிறது. அப்படியிருக்கும் போது கடந்த 4 ஆண்டுகளாக ஆதார் கார்டில் பிறந்த ஆண்டை மாற்றக் கோரி நடையாய் நடந்தும் மாற்றியபாடில்லை.

பிறப்பு சான்றிதழ்
பிறப்பு சான்றிதழ் இல்லை, கல்வி சான்றிதழ் இல்லை என கூறி பிறந்த ஆண்டை மாற்றித் தர மறுக்கிறார்கள் அதிகாரிகள். இதனால் நான் கடுமையான மன வேதனைக்குள்ளாகியுள்ளேன். எனவே எப்படியாவது எனது ஆதார் கார்டில் உள்ள 1900 என்ற பிறந்த ஆண்டை 1982 என மாற்றி தர வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவிதா மனு அளித்துள்ளார். வடமாநிலங்களில் ஆதாரில் பயனாளியின் புகைப்படத்திற்கு பதிலாக சுவாமிகளின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications