திருச்சியில் பைக்கில் வீலிங் செய்தபடி பட்டாசு வெடித்து அலப்பறை.. வீடியோ எடுத்த இளைஞரை தூக்கிய போலீஸ்
திருச்சி: திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், பைக்கின் முன் பக்கத்தில் பட்டாசை வெடிக்க வைத்தபடி இளைஞர் ஒருவர் வீலிங் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அஜய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை தினத்தை ஒட்டி புத்தாடை அணிந்து இனிப்புகளை பகிர்ந்து, பட்டாசுகளை வெடித்து மக்கள் கொண்டாடினர். சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசித்து வந்த மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாடினர். தீபவாளி பண்டிகையின் போது சிலர் ஆர்வக் கோளாறில் விபரீத செயல்களில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.

குறிப்பாக நேற்று தீபாவளி பட்டாசை தனது பைக்கில் முன்புறத்தில் வைத்து வெடிக்க வைத்தபடி வீலிங் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இது போலீசாரின் கவனத்திற்கும் சென்றது. ஆபத்தான முறையில் வீலிங் செய்ததோடு, வெடிகளை பைக்கில் வைத்து வெடித்தபடி பைக்கை ஓட்டிய இளைஞரை போலீசார் தேடி வந்தனர்.
வீடியோ பதிவிட்டவர் கைது: இதில், திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டது தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. வீடியோவை எடுத்தது திருச்சி கல்லங்காடு பகுதியை சேர்ந்த அஜய் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். டெவில் ரைடர்ஸ் என்ற இன்ஸ்டாகிரம் பக்கத்தில் இந்த வீடியோவையும் இளைஞர்கள் பகிர்ந்துள்ளனர்.
இரு இளைஞர்களையும் போலீசார் கண்டறிந்த நிலையில், விதி மீறலுக்கு உதவியதாக இளைஞர் அஜயை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசிடம் சிக்காமல் இருக்க ஹெல்மெட் அணிந்தவாறு தனது பைக்கில் வீலிங் செய்து பட்டாசு வெடித்து இளைஞர் மணிகண்டனையும் போலீசார் தேடி வருகின்றனர்.
லைசன்ஸ் ரத்து செய்யப்படும்: இதைத்தொடர்ந்து திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிவிடை சிறுமருதூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பட்டாசு, வானவெடிகளை வெடித்து சாகசம் செய்த மணிகண்டன் மற்றும் அதற்கு உடைந்தையாக இருந்த அஜய் மற்றும் சிலர் மீது சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருச்சி மாநகரில் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் பைக் ஓட்டி சாகசம் செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அது மட்டும் இன்றி சம்பந்தப்பட்ட நபர்களின் டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications