நல்லா இருந்த ஊரும்.. நாலு பேரும்.. தூத்துக்குடி அருகே 35 லட்சம் மக்கள் பணம் லாக்கருடன் கோவிந்தா
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே இ.வேலாயுதபுரம் கிராமத்தில் ரூ.35 லட்சம் கிராம பொது பணம் லாக்கருடன் திருடப்பட்டுள்ளது.இந்த திருட்டு எப்படி நடந்தது? இந்த பணம் எப்படி வந்தது என்பதை பார்ப்போம்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே இ.வேலாயுதபுரம் கிராமத்தில், கிராம மக்கள் அனைவருக்கும் சொந்தமான நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்தில் உள்ள வேலிக்கருவேல மரங்களை, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை கிராமத்தின் பொது காரியங்களுக்கு செலவு செய்து வருகிறார்கள்.

அதில் செலவு போக மீதமுள்ள பணத்தை அங்குள்ள "தேவேந்திர மஹால்" என்ற திருமண மண்டபத்தில், 7 சாவிகள் கொண்டு திறக்கப்படும் லாக்கரில் பத்திரமாக வைத்திருப்பதை கிராம மக்கள் வழக்க வைத்திருக்கிறார்கள. அந்த வகையில், இந்த ஆண்டு ஊர் மக்களுக்கு பாத்தியப்பட்ட நிலப்பகுதியில் உள்ள கருவேல மரங்கள் ஏலம் விடப்பட்டிருக்கிறது. அந்த மரங்களை ஏலத்தில் எடுத்தவர்கள் மூலம் ரூ.40 லட்சம் பணம் கிடைத்துள்ளது. அந்த பணத்தில் ரூ.5 லட்சத்தை கிராமத்தின் பொது காரியங்களுக்கு செலவு செய்துள்ளார்கள். மீதமுள்ள ரூ.35 லட்சத்தை திருமண மண்டபத்தில் உள்ள லாக்கரில் வைத்திருக்கிறார்கள்
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இ.வேலாயுதபுரம் பஞ்சாயத்து தலைவரான சர்க்கரை என்பவரின் இல்லத் திருமண விழா தூத்துக்குடியில் நடந்துள்ளது. கிராம மக்கள் அனைவரும் தூத்துக்குடியில் திருமண விழாவிற்கு சென்றுள்ளனர். இந்த சமயத்தில், கிராமத்தில் மக்கள் யாரும் இல்லை என்பதை அறிந்துக்கொண்ட அதே கிராமத்தைச் சேர்ந்த சாலமன் ராஜ் மற்றும் அவரது 4 கூட்டாளிகள், கிராம பொது பணம் வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்தின் கதவுகளை உடைத்து ரூ.35 லட்சம் பணத்தை லாக்கருடன் திருடிச் சென்றுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், இவர்களை தடுக்க முயன்றவர்களையும் அரிவாளை காட்டி மிரட்டியதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பட்டப்பகலில் ஐந்து பேர் கிராம மக்கள் இல்லாத நேரமாக வந்து, ஆயுதங்களை காட்டி மிரட்டி லாக்கருடன் 35 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே திருமண விழாவிற்கு சென்று ஊர் திரும்பிய இ.வேலாயுதபுரம் கிராம மக்கள், பணம் கொள்ளயடிக்கப்பட்டது தொடர்பாக சூரங்குடி காவல் நிலையத்தில் பணத்தை திருடி சென்ற சாலமன் உட்பட 5 பேர் மீது புகார் அளித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், பட்டப்பகலில் கிராம பொது பணம் ரூ.35 லட்சத்தை கொள்ளையடித்து சென்றவர் மீது புகார் அளித்தும், இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சூரங்குடி காவல் நிலைய போலீசார் மீது கிராமத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். பணத்தை கொள்ளையடித்தவர்களை பிடித்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications