அரசு புறம்போக்கு நிலம்.. 41482 பேருக்கு பட்டா .. தூத்துக்குடியில் கீதாஜீவன் வெளியிட்ட குட்நியூஸ்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.. அவ்வாறு ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்போர் கணினி பட்டா கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் தூத்துக்குடியில் 41 ஆயிரத்து 482 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதாஜீவன் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் ஆட்சேபனை அற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுக்கு சொந்தமான ஆட்சேபனை அற்ற நில வகைகளை ஆக்கிரமித்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வருவோருக்கு அந்த நிலத்திற்கு பட்டா வழங்க அரசு முடிவு செய்துள்ளது.அதேநேரம் ஒருவர் 10 ஏக்கர் ஆக்கிரமித்திருப்பார்.ஒருவர் ஒரு ஏக்கர் ஆக்கிரமித்து இருப்பார். சிலர் பல நிலங்களை ஆக்கிரமித்து இருப்பார்..

அப்படி எல்லாம் ஆக்கிரமித்து இருந்தால், ஆக்கிரமித்த அத்தனை நிலத்திற்கும் அவர் பெயரில் பட்டா வாங்கிவிட முடியாது. அரசு ஒரு ஆக்கிரமிப்பில் வசிப்பவர்களுக்கு ஒரு சென்ட் அல்லது இரண்டு சென்ட் என்கிற அளவிலேயே பட்டா வழங்கும். அதற்கு மேல் வழங்காது.. அதாவது அவர்கள் கட்டியுள்ள வீட்டை தாண்டி கூடுதலாக பட்டா வாங்கிவிட முடியாது.
அதுவும் அந்த நிலம் நீர் நிலையாக இருக்கக்கூடாது. எந்த ஒரு அரசின் தேவைக்காகவும் அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தி இருக்கக்கூடாது. அதேபோல் பஞ்சமி நிலம், அநாதீனம் உள்பட அரசு தந்த நிலங்களாக இருக்கக்கூடாது .. இப்படி நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த வகையில் பல ஆண்டுகளாக அரசு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பயனாளிகளுக்கு கணினி பட்டா வழங்கும் விழா, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை தாங்கினார். தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரபு, நிலஅளவை துறை உதவி இயக்குனர் சீனிவாசன், தாசில்தார் முரளிதரன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 131 பயனாளிகளுக்கு கணினி பட்டாக்களை வழங்கினார்.
அப்போது அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தங்கள் குடியிருப்புகளுக்கு கணினி பட்டா பெறாத மக்களுக்கு கணினி பட்டா வழங்கும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டிருக்கிறத. இந்த முகாமில் கணினி பட்டா கோரி 3500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தார்கள். இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு முதல் கட்டமாக 151 பேருக்கும், தற்போது 2-வது கட்டமாக 131 பேருக்கும் கணினி பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி பகுதியில் விடுபட்ட அனைவருக்கும் கணினி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்போர் கணினி பட்டா கோரி விண்ணப்பிக்கலாம்.
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாக்களில் உரிமையாளர் பெயர் விவரம் இல்லாத 11 ஆயிரத்து 739 பேர், அரசு நன்செய், புன்செய் என்ற பெயரில் இருக்கும் 5 ஆயிரத்து 949 பேர், நகர்ப்புற புறம்போக்கு வகையில் இருக்கும் 22 ஆயிரத்து 600 பேர், ஜி.ஆர். நத்தம் வகையில் இருக்கும் 1,100 பேர் ஆக மொத்தம் 41 ஆயிரத்து 482 பேர் முறையான பட்டா இல்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் முறையாக பரிசீலனை செய்து பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.பொதுமக்கள் பட்டா தொடர்பாக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம் " இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.












Click it and Unblock the Notifications