தேர்தல் வருதே.. ஓட்டு கேட்டு தமிழக மக்களிடம் போகணுமே என்ற பயமின்றி இருக்கிறது பாஜக.. ஸ்டாலின் தாக்கு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்ததோடு, மத்திய பாஜக அரசை காட்டமாக விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வீடுகளை இழந்தோருக்கும் நலத்திட்ட உதவிகள், இலவச வீட்டு மனை பட்டா, படகுகள் சேதமடைந்த மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு, திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் பங்கேற்றனர்.

நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அனைத்து நிவாரண உதவிகள், மீள்கட்டமைப்பு பணிகளையும் மாநில அரசுதான் அதன் நிதியில் செய்கிறது. நெல்லை, தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூபாய் 6000 வழங்கப்பட்டுள்ளது.
சேதமான, முழுவதும் இடிந்த வீடுகளுக்கு மாற்று வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும்போது மட்டும் அல்லாமல் இறுதி வரை துணை நிற்போம். கால்நடைகள், பயிர்கள் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கினோம். சிறு வணிகர்களுக்கு கடனுதவித் தொகை வழங்கப்படுகிறது. அரசு ஆவணங்களை இழந்தோருக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. வெள்ள பாதிப்புக்காக அனைத்தையும் வழங்கியது இந்த ஸ்டாலின் தான்.
தென்மாவட்ட மக்களின் வாழ்க்கை மேம்பட பெரிய நிறுவனங்களை கொண்டு வருகிறோம். இன்று கூட கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். மலேசியா, சிங்கப்பூர் நிறுவனங்களும் தூத்துக்குடியில் தொழிற்சாலைகளை தொடங்க உள்ளன. தொழிற்சாலைகள் தொடங்கப்படும்போது தென் மாவட்ட இளைஞர்கள் அதிகம் பயன்பெறுவார்கள்." எனத் தெரிவித்தார்.
புதிய அறிவிப்புகள்: மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் 5 ஏக்கரில் வர்த்தக வசதி மையம் ரூபாய் 25 கோடியில் கட்டப்படும். வள்ளியூரில் மாவட்ட மருத்துவமனை கட்டடம் மற்றும் அம்பாசமுத்திரத்தில் புதிய மருத்துவமனை கட்டப்படும். வெள்ளத்தால் சேதமடைந்த நெல்லை மாஞ்சோலை சாலை ரூபாய் 5 கோடி செலவில் சீரமைக்கப்படும்.
கோவில்பட்டியில் ரூபாய் 10 கோடி மதிப்பில் கடலை மிட்டாய் குறுங்குழுமம் அமைக்கப்படும். இந்தக் குழுமத்துக்கான பொது வசதி மையத்தில் மூலப்பொருட்களை தரம் பிரிக்கின்ற வசதி, தானியங்கி பேக்கிங் கூடங்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான கண்காட்சி கூடம் ஆகியவை அமைக்கப்படும்.
மீனவ கிராமங்களில் தூண்டில் வளவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேம்பாரில் ரூபாய் 7 கோடி மதிப்பில் பனைப் பொருட்கள் குறுங்குழுமம் அமைக்கப்படும். தூத்துக்குடியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 50 ஆயிரம் சதுர அடியில் வர்த்தக வசதிகள் மையம் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு: மேலும், “திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், அம்பாசமுத்திரத்திற்கு புதிய மருத்துவமனை கட்டடம், வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவை அமைக்கப்படும். அம்பாசமுத்திரம் புறவழிச் சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த கண்டியபேரி அரசு மருத்துவமனை பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. அது விரைவில் திறக்கப்பட இருக்கிறது.
மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதி கனமழையால் பெரிய பாதிப்பை அடைந்திருக்கின்ற மாஞ்சோலை சாலை 5 கோடியே 4 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.
திருநெல்வேலி மாநகருக்கான மேற்கு புறவழிச் சாலை பணிகளுக்கான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் இருக்கிறது. விரைவில் இதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுப் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் நான் உங்களுக்கு மகிழ்ச்சியோடு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது எல்லாமே தமிழ்நாடு அரசின் மாநில நிதியில் இருந்து செய்து தரப்படுகிறது.” எனத் தெரிவித்தார்.
பாஜக பாராமுகமாக இருக்கிறது: மேலும் பேசிய ஸ்டாலின், “இரண்டு மாபெரும் இயற்கை பேரிடர்களை கடந்த டிசம்பர் மாதம் சந்தித்தோம். இதனால், ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசிடம் 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை நாம் கேட்டோம். மத்திய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்பது மட்டும் இல்லை; தேர்தல் வரப்போகிறதே வாக்கு கேட்டு தமிழ்நாட்டு மக்களை சந்திக்க வேண்டும் என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் மத்திய அரசும், நிதியமைச்சரும் பாராமுகமாக இருக்கிறார்கள்!
நாம் இதை கேட்டால் என்ன சொல்கிறார்கள்? 'உங்களிடம் சாதுரியம் இருந்தால் நீங்கள் சாதித்துக் கொள்ளலாமே' என்று மிகவும் ஆணவமாக அவர் பேட்டி அளித்திருக்கிறார். இது அவர் வகிக்கின்ற பதவிக்கு அழகு அல்ல! எங்களிடம் சாதுரியம் இருப்பதால்தான் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டியிருக்கிறோம்.
உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் பலவும் தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள். என்ன காரணம்? எங்களுடைய வளர்ச்சியைப் பார்த்துத்தானே வருகிறார்கள்! தமிழ்நாடு எல்லா துறைகளிலும் முதலிடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் திராவிட மாடல் அரசின் சாமர்த்தியம்தானே!?
மத்திய பா.ஜ.க. அரசின் இடைக்காலத் தடைகளையும் தாண்டித்தான் இந்த வெற்றியை பெற்று வருகிறோம். எத்தகைய இடர் வந்தாலும், யாரையும் எதிர்பார்த்து காத்திருக்காமல், மக்கள் பணியாற்றும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி!
உங்களுக்காக களத்தில் இருக்கின்ற ஆட்சிதான், தி.மு.க ஆட்சி! உங்கள் குடும்பங்களில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் இருப்பேன்...இருப்பேன்...இருப்பேன்..." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications