நங்கூரம் இட்ட கனிமொழி.. தூத்துக்குடி மாநகராட்சியில் அபார வெற்றி பெற்ற திமுக
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளில் திமுக 50 வார்டுகளில் வென்று மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தூத்துக்குடி மாநகராட்சியை திமுக தன்வசமாக்கியது. இந்த வெற்றிக்கு கனிமொழி எம்பியும் ஒரு காரணம் ஆகும். அவரது தொடர் பிரச்சாரம் மக்களிடம் ஆட்சியின் சாதனைகளை கொண்டு சேர்த்துள்ளது என்கிறார்கள். தூத்துக்குடி மக்களுக்கும் கனிமொழிக்கும் இருக்கும் பாச பிணைப்பு என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ராஜ்யசபா உறுப்பினர்
கவிஞர், எழுத்தாளர், இலக்கியவாதி, தமிழ் ஆர்வலர் ஆகியவற்றிலும் ஜொலித்த கனிமொழி, அரசியலிலும் அவரது செயல்பாடுகள் டெல்லி வரை ரீச்சாகியுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக முதல்முறையாக கனிமொழி ராஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டார். மீண்டும் 2013 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ராஜ்யசபாவுக்கு கனிமொழி தேர்வு செய்யப்பட்டார். அப்போது கருணாநிதியின் செல்வாக்கினால் நியமன பதவிக்கு கனிமொழி செல்கிறார் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

தமிழகத்தின் குரல்
அப்போதும் தமிழகத்தின் குரலாக ஒலித்தார். சமூகம் சார்ந்த எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுத்து வந்தார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த 2018ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்க சென்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி
அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். நியாயமான கோரிக்கைக்காக போராடியவர்களை சுட்டுக் கொல்வதா, இதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? என பல கேள்விகளை கனிமொழி எழுப்பினார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டார். அத்துடன் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து எந்த அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் அவர்களுக்கு கனிமொழி ஆதரவு தந்தார்.

நியாயம் கேட்ட கனிமொழி
இந்த சம்பவத்திற்கு நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையிலும் நியாயம் கேட்டார். கொல்லப்பட்ட 13 பேரின் வீடுகளுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார். அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, "துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்" என்ற அதிர்ச்சிகரமான பதிலை தெரிவித்தார்.

தூத்துக்குடியில் போட்டி
ஒரு மாநில முதல்வரே இவ்வாறு கூறியிருந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் திமுகவின் முன்னெடுப்புகள் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தன. ஸ்டெர்லைட் எதிர்ப்பு, துப்பாக்கிச் சூடு விவகாரங்களில் சிறப்பாக செயல்பட்ட கனிமொழிக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை திமுக தலைமை வழங்கியது. தேர்தலுக்கு வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தூத்துக்குடியில் முகாமிட்ட கனிமொழி, அங்குள்ள ஒவ்வொரு சந்து பொந்துகள், இண்டு இடுக்குகளில் இருக்கும் மக்களின் பிரச்சினைகளை கூட கேட்டறிந்தார்.

குறைகளை கேட்டறிந்த கனிமொழி
அங்கேயே வீடு எடுத்து தங்கிய கனிமொழி நாள்தோறும் அந்த பகுதி மக்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் தூத்துக்குடி மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். அதாவது இவர் செய்த பணிக்கு இவருக்கு மக்கள் வெற்றியை கொடுத்தார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகள் மட்டுமல்லாமல் மிக அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார் என்றால் அதற்கு அவரது செயல்பாடுகள்தான் காரணம். அன்று முதல் தனது தொகுதியான தூத்துக்குடி மக்களுக்கு ஏதாவது என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பதும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையும் செய்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம்
கடந்த 2020 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் கொலை வழக்கையும் தட்டிக் கேட்டு அதை டெல்லி வரை கொண்டு சென்றார். சாத்தான்குளம் சம்பவம் மிகவும் உணர்வுப்பூர்வமான சம்பவம் என்ற போதிலும் தைரியமாக பெனிக்ஸ்- ஜெயராஜின் வீட்டுக்கு சென்று அங்கு அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். மக்களவை தேர்தலிலும் சரி, சட்டசபை தேர்தலிலும் சரி ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் சரி கனிமொழியின் உழைப்பை யாராலும் மறுக்க முடியாது. அது போல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களை விவரித்த கனிமொழி, அதிமுக, பாஜகவினரின் கேள்விகளுக்கு சுடச்சுட பதில் அளித்தார். தூத்துக்குடியில் ஒவ்வொரு ஊராக இவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

60 வார்டுகளில் 50 வார்டுகளில் வெற்றி
அதன் பலனாக தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 50 வார்டுகளை திமுக தன்வசமாக்கியுள்ளது. அதிமுக வெறும் 6 வார்டுகளிலும் சுயேச்சைகள் 4 இடங்களிலும் வென்றுள்ளனர். இந்த வெற்றிக்கு பின்னால் கனிமொழியின் கடும் உழைப்பு இருக்கிறது. 60 மாநகராட்சிகளில் 50 இடங்களில் வெற்றி என்பதெல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது. தொடர்ந்து கடுமையாக போராடி, தன் கட்சி வளர பாடுபட்டு வரும் கனிமொழிக்கு அண்ணன் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன பரிசு கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது. கட்சியின் தலைமைக் கழக பதவிகளில் ஒன்றை கனிமொழிக்கு வழங்க வேண்டும் என்பதுதான் அவரது ஆதரவாளர்களின் எண்ணமாக இருக்கிறது. எனவே இத்தனை தொடர் வெற்றியை குவித்த கனிமொழிக்கு அண்ணனிடம் இருந்து பரிசு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications