‛மாஸ்டர் பிளான்’.. குலசை ராக்கெட் ஏவுதளத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? இத்தனை மேட்டர் இருக்கா!
தூத்துக்குடி: தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ள நிலையில், அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திற்கான தேவை என்ன? குலசேகரப்பட்டினம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான பின்னணி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
யாருமே எதிர்பார்க்காத தருணத்தில் சந்திரயான் 3 சம்பவம் செய்து அசத்தியிருந்தது. அதேபோல ஆதித்யா எல்1, எக்ஸ்போசாட் போன்ற மிஷன்கள், விண்வெளி துறையில் இனி இந்தியாவை புறக்கணிக்க முடியாது என்கிற நிலையை சர்வதேச நாடுகளுக்கு உருவாக்கியுள்ளன. இஸ்ரோவின் இந்த அதிரடியான வேகம் குறைவதற்குள், சூட்டோடு சூட்டாக, நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஷாக் கொடுத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் படுக்காபத்து, பள்ளக்குறிச்சி, மத்தவன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் 2,233 ஏக்கர் பரப்பளவில் ரூ.950 கோடியில் இந்த ராக்கெட் ஏவுதளம் அமைகிறது. இங்கிருந்து சிறிய வகை ராக்கெட்களை ஏவ முடியும். இந்த இடத்தை தேர்ந்தெடுத்தற்கான காரணம், புவியியல் அமைப்புதான். பூமத்திய ரேகைக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்து ராக்கெட் ஏவப்படுகிறதோ, அந்த அளவுக்கு எரிபொருளை மிச்சப்படுத்த முடியும். குலசேகரப்பட்டினம் பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக இருக்கிறது
இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ராக்கெட்டை ஏவும்போது செலவாகும் எரிபொருளை காட்டிலும், குலசேகரப்பட்டினத்திலிருந்து ஏவப்படும் ராக்கெட்டுக்கு குறைவான எரிபொருள் இருந்தால் போதும். எனவேதான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இரண்டாவது காரணம், இனி வரும் காலங்களில் சிறிய செயற்கைக்கோள்களுக்கான உலகளாவிய சந்தை மிகப்பெரியதாக விரிவடையும். 2020ம் ஆண்டு இதன் மதிப்பு 3215.9 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 2030ம் ஆண்டில், அப்படியே 13,711.7 மில்லியன் டாலராக அதிகரிக்கும். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆஃபர். ஏனெனில், இந்த வாய்ப்பு குறித்து முன்கூட்டியே கணித்த இந்தியா, விண்வெளித்துறையில் அந்திய முதலீட்டை அனுமதித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக தற்போது, சிறிய ராக்கெட்களை ஏவ குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தையும் தயார் செய்து வருகிறது. இதன் மூலம் உலக நாடுகளிடமிருந்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்தும் சிறிய வகை செயற்கைக்கோள்களை, இந்தியா தனது ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பி வைக்கும். அதன் மூலம் நாட்டின் வருவாய் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
இது குறித்து சென்னையை சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான 'அக்னிகுல் காஸ்மோஸின்' தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் கூறுகையில், "குலசேகரப்பட்டினம் விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்ல மிகவும் தோதான இடம். ஏனெனில் குலசேகரப்பட்டினத்திற்கும், அண்டார்டிகாவுக்கும் இடையில எதுவுமே கிடையாது. நிலப்பரப்புக்கு மேலே ராக்கெட்டை ஏவுவதைவிட, கடல் பரப்புக்கு மேல் அதை ஏவுவது பாதுகாப்பானது. சிறிய ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்த, ஒரு சரக்கு லாரி, நான்கு கேரவன்கள் இருந்தால் போதுமானது" என்று கூறியுள்ளார்.
விண்வெளி ஆர்வலர்கள் இது குறித்து கூறுகையில், "வழக்கமான வானிலை ஆய்வு, தொலை தொடர்பு போன்ற வேலைகளிலிருந்து விலகி, அசல் விண்வெளி ஆய்வை நோக்கி பயணிக்க இந்த அந்திய நேரடி முதலீடு உதவும். ஆதித்யா எல்1, எக்ஸ்போசாட் மிஷன்கள் வரிசையில் இன்றும் அதிகமான ஆய்வுகளை நாம் இஸ்ரோவிடமிருந்து எதிர்பார்க்கலாம்" என்று கூறியுள்ளனர்.
விண்வெளித்துறைக்கு உதவும் நோக்கில் தமிழ்நாடும் தனது பங்குக்கு தூத்துக்குடி அருகே விண்வெளி தொழில் பூங்கா மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்க முன்வந்திருக்கிறது. இதன் மூலம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் இனி வரும் காலங்களில் செம பிஸியாக மாறிவிடும் என்றும் விண்வெளி ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications