"அவர் டீ குடிப்பதையும், சைக்கிள் ஓட்டுவதையும் பார்க்கவா ஓட்டு போட்டார்கள்?" சீறும் எடப்பாடி பழனிசாமி
தூத்துக்குடி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதிமுக இனை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் வரும் பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பணிகளை அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்தத் தேர்தலில் அதிமுக தனித்துக் களமிறங்குவதால், பெரியளவில் வெற்றி பெற வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. இதற்காகத் தீவிர பிரசாரத்தை அதிமுக முன்னெடுத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
இதற்கிடையே தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழகமெங்கும் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை அதிமுக வேட்பாளர்கள் பெற வேண்டும். மாநகராட்சிகளில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தான் மேயராக அமர வேண்டும்.

திமுகவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்
இதுபோல் நகராட்சி, பேரூராட்சிகளில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களே வெற்றிபெற வேண்டும். அதற்கு இரவு பகல் பாராது கழக தொண்டர்கள் உழைக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெற்ற கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றிபெற்றதை அறிவோம். அதே வெற்றியை இந்த தேர்தலிலும் அதிமுகவுக்கு மக்கள் தர வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். இந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலமாக திமுகவுக்குச் சரியான பாடத்தை மக்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.

முதல்வர் மீது அட்டாக்
தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியினால் எந்த நன்மையும் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்கவில்லை. புதிதாக எந்த திட்டத்தையும் திமுக அரசு மக்களுக்காகக் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கிக் கொண்டுவந்த திட்டங்களைத்தான் திமுக முதல்வர் ஸ்டாலின் இப்போது தொடங்கி வைத்து வருகிறார். அவர், ஆய்வுப் பணி என்னும் பெயரில் நடைப்பயணம் போவதையும், 'டீ' குடிக்கச் செல்வதும், உடற்பயிற்சி கூடத்திற்குப் போவதைப் பார்க்கவா மக்கள் வாக்களித்தனர். இதன் மூலமாக அவர் வீண் விளம்பரம் மட்டுமே தேடிக்கொள்கிறார்.

வாக்குறுதியை நிறைவேற்றவில்லை
இதை எல்லாம் காட்டி மக்களை ஏமாற்ற முடியாது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவே மக்கள் திமுகவுக்கு வாக்களித்தனர். தேர்தல் சமயத்தில் திமுகவினர் 525 வாக்குறுதிகளைக் கொடுத்தனர். அதில் 200-ஐ நிறைவேற்றியதாகச் சொல்வது அணைத்தும் பச்சைப் பொய். குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என உறுதி கூறியதிலிருந்து, கல்விக் கடன் தள்ளுபடி, முதியோர் உதவித் தொகை உயர்த்தி வழங்குதல் போன்றவற்றை நிறைவேற்றவில்லை. நகைக்கடன் தள்ளுபடி என்று சொல்லி 35 லட்சம் பேரை ஏமாற்றியுள்ளனர்.

மாற்றி மாற்றிப் பேசும் திமுக
திமுக ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு, வந்த பின்பு ஒரு பேச்சு. இதுதான் திமுக நிலைப்பாடு. மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்தும், தமிழ்நாட்டில் விலையைக் குறைக்க திமுக அரசு மறுத்துவிட்டது. மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு பொருள்கள் யாருக்கும் முறையாக வழங்கப்படவில்லை. தரமற்ற பொருள்களை வழங்கி மக்களின் வயிற்றில் அடித்த அரசாங்கம் திமுக.

மொத்தம் ஊழல் தான்
திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது. கொள்ளையடிப்பதற்காகவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மக்களுக்குக் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம் எனவே மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலர மக்கள் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications