அந்த ஒற்றை வார்த்தை.. பிரதமர் மோடியை விமர்சித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பாய்ந்த வழக்கு
தூத்துக்குடி: பிரதமர் மோடி குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தான் பாஜக அளித்த புகாரில் பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தான் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார்.

தற்போது கனிமொழி தூத்துக்குடி எம்பியாக உள்ள நிலையில் மீண்டும் அவர் களமிறங்கி உள்ளார். இந்நிலையில் தான் தூத்துக்குடியில் திமுக நாடாளுமன்ற செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எம்பி கனிமொழி, திருச்செந்தூர் எம்எல்ஏவும், தமிழக மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
குறிப்பாக சேலத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மறைந்த தமிழக முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சியின் காமராஜரை பாராட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் பேசியபோது, ‛‛காமராஜரை கட்டிப்பிடித்து விளையாடியது போல் மோடி பேசுகிறார். டெல்லியில் காமராஜரை கொல்லனும் நினைச்ச பாவிங்க நீங்க தான்’’ எனக்கூறினார். இந்த வேளையில் தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தி அவர் பிரதமர் மோடியை விமர்சித்தார்.
இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானது. பிரதமர் மோடி குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் கூறிய ஒரு வார்த்தை சர்ச்சையானது. இதையடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீத தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார்.
அதில் பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்து இருந்தார். அதோடு அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய வீடியோவும் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அனிதா ராதகிருஷ்ணன் பேச்சு தொடர்பாக பாஜக சார்பில் தேர்தல் அதிகாரியிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications