மாணவிகளை மது குடிக்க சொல்லி அத்துமீறிய விவகாரம்.. கைதான உடன்குடி பள்ளி செயலாளருக்கு நெஞ்சு வலி
தூத்துக்குடி: தூத்துக்குடி உடன்குடி பள்ளியில் மாணவிகளை மது குடிக்க சொல்லி வற்புறுத்தி அத்துமீறியதாக உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து அவருக்கு உடந்தையாக இருந்ததாக பள்ளியின் முதல்வர் மற்றும் செயலாளரும் இன்று கைது செய்யப்பட்டனர். கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த போது பள்ளியின் செயலாளருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சல்மா மெட்ரிகுலேஷன் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உடன்குடி பகுதியைச் சேர்ந்த பொன்சிங் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க மாணவிகளை ஆசிரியர் பொன்சிங் அழைத்து சென்றுள்ளார். மறுநாள் போட்டி நடைபெறும் என சொல்லப்பட்டதால், இரவில் தூத்துக்குடியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள். அப்போது உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், மாணவிகள் சிலரிடம் மது குடிக்குமாறும் டபுள் மீனிங்கில் பேசி அத்துமீறியதாகவும் சொல்லப்படுகிறது. ஆசிரியரின் இந்த செயலால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இந்த தகவலை கூறியுள்ளனர். இதனால் ஆவேசம் அடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியரை வேலையை விட்டு தூக்கிவிட்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.
எனினும், பள்ளி செயலாளர் மற்றும் தலைமை ஆசிரியை சம்பவத்தை மறைத்துள்ளதாகவும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர். மேலும் இதுதொடர்பாக துணை சூப்பிரண்டிடம் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். மேலும், மாணவிகளின் உறவினர்கள் சிலர் பள்ளி முன் உள்ள சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், பள்ளியின் முதல்வர் மற்றும் செயலாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று இரவு உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீசார் கைது செய்தனர். கோவையில் உறவினர் வீட்டில் மறைந்திருந்த பொன்சிங்கை கோவை போலீசார் கைது செய்தனர். மேலும் பொன்சிங் மீது திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று அவருக்கு உடந்தையாக இருந்ததாக பள்ளியின் முதல்வர் சார்லஸ் சுவீட்லி மற்றும் பள்ளி செயலாளர் செய்யது அகமது ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று பள்ளி முதல்வர் சார்லஸ் சுவீட்லியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து பள்ளி செயலாளர் செய்யது அகமதுவையும் போலீசார் கைது செய்தனர். பள்ளி செயலாளர் செய்யது அகமதுவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறினார். நெஞ்சை பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்ததால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications