குட்டை சகதியில் சினைப்பசு மாடு உயிருடன் எழுந்து வந்து! நெகிழ்ந்த தூத்துக்குடி.. உயிர்காத்த ஹீரோக்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அய்யனார் காலனியில் உள்ள ஒரு குட்டையில் எதிர்பாராத விதமாகச் சினைப் பசுமாடு ஒன்று சகதிக்குள் சிக்கி உயிருக்குப் போராடிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பிறகு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.. தர்மத்தின் தலைமகன்களாகச் செயல்பட்ட தீயணைப்பு வீரர்களை பற்றின செய்திதான், தற்போது சோஷியல் மீடியா முழுவதுமே அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.
பொதுவாக கோடை காலங்களில் வனவிலங்குகள் பெரும்பாலும் நீர் மற்றும் உணவை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடுவது இயல்பாகிவிடுகிறது.

இப்படி ஊருக்குள் நுழையும் வனவிலங்குகள் சாலையோரம் வாகனங்களில் அடிபட்டும், ரயில்களில் அடிபட்டும் உயிரிழக்கும் கொடுமையும் ஆங்காங்கே நடந்து விடுகின்றன.
அடிபடும் வனவிலங்குகள்
சிலசமயம், வெள்ள நீர், பள்ளம், சகதிகளில் சிக்கி உயிருக்கு போராடும் நிலைமையும் அந்த விலங்குகளுக்கு நேரிட்டு விடுகிறது.. இதுபோன்ற நேரங்களில் வனத்துறையினர் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட விலங்குகளை ஆபத்தில் இருந்து மீட்டு விடுகிறார்கள்..
நீலகிரி யானை சபாஷ்
சமீபத்தில்கூட நீலகிரி வனப்பகுதியில் நடந்த சம்பவம் பலரையும் சிலிர்க்க வைத்தது.. குன்னூர் பகுதியில், ஒரு பழங்குடி கிராமத்திற்கு அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் யானை ஒன்று சிக்கிக் கொண்டது.
இந்த விஷயம் தெரிந்தவுடன், வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தண்ணீர் தொட்டியை உடைத்து யானையை வெளியே வர வழி செய்தனர்.. இதனால் யானையின் உயிர் காப்பாற்றப்பட்டது.. அத்துடன், குன்னூர் வனத்துறை அந்த யானையை மீட்டு காட்டிற்கு பத்திரமாக திருப்பி அனுப்பினார்கள்.
இந்த வீடியோவை IFS அதிகாரி சுப்ரியா சாஹு தன்னுடைய சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, சரியான நேரத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டதற்காக வனத்துறையினரை பாராட்டியிருந்தது நினைவிருக்கலாம்.
தூத்துக்குடி குட்டையில் பசுமாடு
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சத்யன் என்பவருக்குச் சொந்தமான ஒரு பசுமாடு, புதுக்கோட்டை அய்யனார் காலனியில் குட்டையில் தவறி விழுந்துவிட்டது.. பிறகு அந்த குட்டையிலுள்ள சகதியில் ஆழமாகப் புதைந்து வெளியே வர முடியாமல் அந்த பசுமாடு சிக்கி கொண்டது.
இதைப்பார்த்து பதறிப்போன மாட்டின் உரிமையாளர் சத்யன், தன் கண்ணெதிரே தாய் பசுவின் தவிப்பைக் கண்டு நிலைகுலைந்து போனார்.. உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தார்.
தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போக்குவரத்து அலுவலர் புன்னவனகட்டி, ஏட்டு யோகமணி சங்கர், மற்றும் தீயணைப்பு வீரர்கள் தவசி, சக்திவேல், வெங்கடசாமி ஆகியோர் கொண்ட குழுவினர், சகதிக்குள் சிக்கியிருந்த பசுவை மீட்கும் முயற்சியில் உடனடியாக இறங்கினார்கள்..
இடுப்பளவு சகதியில் சிக்கிய சினைப் பசு
அந்த குட்டையில் இடுப்பளவு சகதி இருந்த நிலையில், எதையும் பொருட்படுத்தாமல், வீரர்களும் அந்த சகதிக்குள் சடாரென்று குதித்தனர்.. பல மணி நேரம் கடும் போராட்டத்திற்குப் பிறகு, கயிறுகள் மற்றும் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, சினைப் பசுவை மிகுந்த கவனத்துடன் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
தன்னுடைய பசு மாடு உயிருடன் வந்து நின்றதை கண்டமே சத்யனுக்கு ஒரே குஷியாகிவிட்டது.. இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொதுமக்களுக்கும் நிம்மதி பெருமூச்சு ஏற்பட்டது.. இதையடுத்து, தன்னுடைய பசு மாட்டை காப்பாற்றி தந்த தீயணைப்பு வீரர்களுக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார் சத்யன்.
பொதுமக்கள் பாராட்டு!
குட்டை சகதிக்குள் சிக்கி உயிருக்கு போராடிய ஒரு வாயில்லா ஜீவனை, தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்ட தீயணைப்பு வீரர்களின் இந்த தரமான செயலை, புதுக்கோட்டை அய்யனார் காலனி மக்கள் வெகுவாக பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, வனவிலங்குகளின் உண்மையான பாதுகாவலர்கள் இவர்கள்தான் என்றும் புகழாரம் சூட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications