குளத்திற்கு பெட்ரோல்.. இப்போ மணலில் புதைந்து ரீல்ஸ்.. அடங்காத சாத்தான்குளம் ரஞ்சித் பாலா
தூத்துக்குடி: தூத்துக்குடி சாத்தான்குளம் அருகே ரீல்ஸ் வியூஸ்க்காக யூடியூபர் ரஞ்சித் பாலா என்பவர் மணலுக்குள் தன்னை புதைத்து, மண்ணைப் போட்டு மூடி அதன் மேல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். மேலும் அந்த வீடியோவை வியூவ்ஸ் அதிகம் வர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், யூடியூபர் ரஞ்சித் பாலா மீது நடவடிக்கை எடுக்க கோரி நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் பாலா. யூடியூபரான இவரை இன்ஸ்டாவில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்கள் உள்ளனர். சாகசம் என்ற பெயரில் உயிரை பணையம் வைத்து பார்ப்பவர்களை பதை பதைக்க வைக்கும் செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்ட ரஞ்சித் பாலா அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வது வாடிக்கை.

மண்ணுக்குள் புதைந்து தீ வைத்து வீடியோ
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக குளம் ஒன்றில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து அதில் குதித்து வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாவில் பதிவிட்டார். இது போலீசாரின் கவனத்திற்கு சென்றதும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்குப்பதிவுக்கு பிறகு கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்த அவர் மீண்டும் எல்லை மீறிய வீடியோக்களை பதிவிட தொடங்கினார்.
இந்த நிலையில், தனது வரம்பு மீறிய செயலின் உச்சமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக செம்மண் தேரிக்காட்டில் ஒரு குழி வெட்டி அதில் அவர் படுத்து, மண்னை போட்டு மூடி வீடியோ வெளியிட்டார். அவரைச் சுற்றி இருந்த அவரது சகாக்கள் அவரை மணலுக்குள் போட்டு மண்ணை போட்டு மூடினர். தொடர்ந்து மண்ணை போட்டு மூடியதும் அந்த இடத்தில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.
48 செகண்ட் வீடியோ
தொடர்ந்து இதை வீடியோவாக பதிவு செய்த ரஞ்சித் பாலா மற்றும் அவரது சகாக்கள் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்க்காக பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவானது சுமார் 48 செகண்ட் ஓடுகிறது. அதில் தேரிக்காடு மணலில் ஒரு ஆளை புதைக்கும் அளவுக்கு தோண்டி வைத்துள்ளனர். பின்னர் அந்த குழிக்குள் அவர் படுக்க, மற்ற 3 பேரும் சுற்றியிருந்து மண்களை சரித்து அவரை முழுவதுமாக மூடுகின்றனர். பின்னர் ஒருவர் பெட்ரோலை அவரை புதைத்த இடத்தில் ஊற்றி பின்னர் தீ வைத்து விடுகிறார்கள்.
நெட்டிசன்கள் கொதிப்பு
இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ்க்காக இப்படி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாக வீடியோக்களை தொடர்ச்சியாக பதிவிட்டு வரும் ரஞ்சித் பாலா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
வழக்கம்போல கண் துடைப்பு நடவடிக்கை எடுக்காமல் உரிய சட்ட விதிகளின்படி ரஞ்சித் பாலா மீது நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும் எனவும் அப்போதுதான் வரும் காலத்தில் இத்தகைய செயல்களில் அவர் ஈடுபட மாட்டார் என்றும் பொதுமக்கள் கூறினர். அவருடைய வீடியோக்கள் பெரும்பாலானாவை ஆபத்தை விளைவிக்கும் போக்குடனே அமைந்துள்ளது என்று நெட்டிசன்களும் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications