கேஎஃப்சி.. தூத்துக்குடி ஹோட்டலில், ஃபிரிட்ஜை திறந்ததுமே மிரண்ட ஆபிசர்ஸ்.. KFC கஸ்டமர்களும் அதிர்ச்சி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஒரு ஓட்டலில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தியதில் பரபரப்பு ஏற்பட்டது. என்ன நடந்தது?
கர்நாடகாவில் பானிபூரி விவகாரத்தையடுத்து, தமிழ்நாட்டிலும் பானிபூரி கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.. பானிபூரிகளில் "பச்சை கலர்" செயற்கை நிறமிகள் கலக்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

தூத்துக்குடி: அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டத்திலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.. இதில், சோதனை செய்வதற்காக, பானிபூரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், கெட்டுப்போன பொருட்களை பானி பூரி கடைகளில் பயன்படுத்த கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தனர். ஆய்வறிக்கை வந்ததுமே, இதுகுறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
ஜவுளி கடை வளாகம் மற்றும் சாலையோரங்களில் உள்ள பானி பூரி கடை உள்ளிட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, பானிபூரி கடையில் செயற்கை நிறமிகள் ஏதும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை.
அதிகாரிகள் ஆய்வு: ஆனால், தூத்துக்குடியில் சில ஓட்டல்களிலும், சாலையோர கடைகளிலும், பானிபூரி மட்டுமல்லாமல், பழைய கெட்டுப்போன உணவுகளை பயன்படுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.. உடனே தூத்துக்குடியில் உள்ள மற்ற ஓட்டல்களிலும் ஆய்வு நடந்தது.
வேலவன் ஹைப்பர் மார்க்கெட் கட்டிடத்தில் அமைந்துள்ள பிரபல கேஎஃப்சி சிக்கன் நிறுவனத்தின் ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை செய்தபோது, கெட்டுப்போன பழைய எண்ணெய்களைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பழைய எண்ணையை சுத்திகரிக்க, மெக்னீசியம் சிலிகேட் சிந்தடிக் என்ற ரசாயனத்தை பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பழைய எண்ணெய்: இறுதியில், 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக், மற்றும் இதை பயன்படுத்தி தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய உணவு எண்ணெய் போன்றவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..
அதேபோல, 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த 56 கிலோ கோழிக்கறியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஓட்டலின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து செய்து உத்தரவிட்டதுடன், மறு உத்தரவு வரும் வரை, ஓட்டலை திறக்க அனுமதி கிடையாது என்றும் எச்சரித்துவிட்டு சென்றனர். இந்த ஓட்டல் அங்குள்ள பிரபலமான மாலல் ஒன்றில் செயல்பட்டு வருகிறதாம்.
கேஎஃப்சி நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட மெக்னீசியம் சிலிகேட் என்ற ரசாயனம் எண்ணெயில் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்ததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது தூத்துக்குடியில் பரபரப்பை தந்து வருகிறதுடன், ஒட்டுமொத்த கேஎப்சி கஸ்டமர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications