15 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம்! முன்னின்று நடத்திய அமைச்சர் சேகர்பாபு
தூத்துக்குடி: கடந்த 2009ம் ஆண்டுக்கு பின்னர் இன்று மீண்டும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. இதனை அமைச்சர் சேகர்பாபு முன்னின்று நடத்தியுள்ளார்.
சுமார் 3000 ஆண்டுகள் பழமையான கோயிலாக கருதப்படும் இது, முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கிறது. மற்ற 5 வீடுகளும் மலைப்பகுதிகளில் அமைந்திருக்க, இது ஒன்று மட்டுமே கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கிறது. அந்த வகையில் மிகவும் பிரசித்தி பெற்றதாக இக்கோயில் இருக்கிறது.

திருக்கோயில்களில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஆனால் திருச்செந்தூர் கோயிலுக்கு 12 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்தது. இதனையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்குக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டது.
அதேபோல மறுபுறம், எச்.சி.எல் நிறுவனத்தின் சார்பில் ரூ.200 கோடியும் குடமுழுக்குக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து கோயிலை புதுப்பிக்கும் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்றன. முதற்கட்டமாக கோயில் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு, சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டன. ராஜ கோபுரத்தின் கீழ் தளம், தூண்கள், 9 கோபுர கலசங்களை புதுப்பித்தல், கலசங்களில் மீண்டும் தானியங்களை நிரப்புதல் ஆகிய பணிகள் நடைபெற்றன.
இதில் சவாலான பணி என்னவெனில் 9 கோபுர கலசங்களையும் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். இதற்காக சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர் கோபுர கலசங்கள் பத்திரமாக கீழே இறக்கி கொண்டுவரப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. மேலும் வள்ளி குகை, பஞ்ச லிங்கம், நாழி கிணறு உள்ளிட்டவையும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து, குடமுழுக்கு பணிகள் தீவிரமடைந்தன. இது குறித்த பேட்டியளித்திருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கை ஒட்டி 3 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு ஒரு மைல்கல்" என்று கூறியிருந்தார்.
கடந்த 28ம் தேதி சேகர்பாபு மற்றும் கனிமொழி எம்பி கோயிலில் குடமுழுக்கு பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். குடமுழுக்குக்கு வரும் தனியார் வாகனங்கள் நிறுத்த சிறப்பு ஏற்பாடு, கூடுதல் அரசு பேருந்துகளை நிறுத்துவதற்கு இடங்கள், கோயில் சார்பில் அன்னதான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும், பாதுகாப்பு பணிகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்திருந்தார்.
கும்பாபிஷேக யாக சாலை மற்றும் அதன் பாதுகாப்பு பணிகள், கோயில் சார்பில் கட்டப்பட்ட 52 அறைகளின் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது "பக்தர்களுக்கு தேவையான தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள், கோயில் உபயதாரர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதானம் வழங்கும் இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. கழிப்பிடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு, மருத்துவ வசதிகள் குறித்தும், ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டவை குறித்தும் அனைத்து துறை அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கான 90 சதவிகிதத்திற்கும் மேலான பணிகள் நிறைவடைந்துள்ளன" என்று கூறியிருந்தார்.
நிதி ஒதுக்கியது தொடங்கி, இன்று குடமுழுக்கு நடந்தது வரை அமைச்சர் சேகர்பாபு உடன் நின்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்து வந்திருக்கிறார். இறுதியாக இன்று அவர் முன்னிலையில் கோயில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றிருக்கிறது.
கோயில் சிற்பங்கள் சிறப்பாக புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. பக்தர்களின் தங்கும் வசதிக்காக, தற்காலிக ஓய்வறை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இன்று நடந்த குடமுழுக்கில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். ஆனாலும் எந்த பிரச்சனையும் இன்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications