நீர் நிலைகளின் ஓரத்தில் பனை விதைகள்.. சாத்தான்குளம் சுற்று வட்டாரத்தில் சமூக ஆர்வலர்கள் தீவிரம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் வறட்சி நிறைந்த பகுதிகளாக உள்ள சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் விதமாக பனை விதைகள் நடும் பணியினை சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் தீவிரமாக தொடங்கியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வறட்சி நிறைந்த பகுதி ஆகும். நிலத்தடி நீர் தேக்கம் குறைவாக உள்ள பகுதி என்பதால் இங்கு பெரும்பாலும் வறட்சியை ஓரளவு தாங்க கூடிய மரங்களே அதிகம் காணப்படுகின்றன. பெரும்பாலும் முருங்கை விவசாயம் அதிக அளவில் காணப்படுகிறது.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
அதேபோல, வறட்சியை தாங்கி நிற்க கூடிய பனை மரங்கள் சாத்தான்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள உடன்குடி, திசையன்விளை பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. பனை மரம் சார்ந்த தொழில்கள் அதிகம் நடைபெறக்கூடிய பகுதியாக இருந்தாலும் இங்கு பனை மரங்கள் அழிவை நோக்கி செல்வதால், பனை மர விதைகளை நட்டு பனை மரங்களை இப்பகுதியில் அதிக வளர வைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.
உடன்குடி என்றாலே கருப்பட்டி என்று பெயர் பெற்றுள்ள இங்கு, பனை மரங்கள் குறைந்து இருப்பதால் அதனை அதிகரிக்க பனை விதைகளை நட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். பனைமரங்களை பொறுத்தவரை கற்பக விருட்சம் என்ற பெருமையை பெற்றது. பனைமரத்தின் ஓலை முதல் வேர்கள் வரை அனைத்துமே மக்களுக்கு பயனளிக்க கூடியது.
பனை விதைகள் நடும் பணி
இத்தகைய சிறப்பு வாய்ந்த பனை மரங்கள் அழிவை நோக்கி செல்வதை தடுக்க தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள சூழலில், நிலத்தடி நீரை பாதுகாக்கும் விதமாக பனை விதைகள் நடும் பணியினை சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் தீவிரமாக தொடங்கியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக சாத்தான்குளம், சாஸ்தாவிநல்லூர், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பனை விதைகளை நடும் பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர். இதில் சிறப்பு விருந்தினராக வட்டாட்சியர் ராஜேஸ்வரி கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு வைத்தார்.
நிலத்தடி நீர் அதிகரிக்க
பனை மரங்களை பொறுத்தவரை மக்களுக்கு பல்வேறு வகையில் பயனளிக்கிறது. அதாவது பனைமரங்களுக்கு நிலத்தடி நீரை பாதுகாக்கும் தன்மை அமைந்துள்ளது. பனை மரங்களின் வேர்கள் ஆழமாக நிலத்திற்குள் செல்லும் ஆற்றல் கொண்டவை. இது நிலத்தடி நீரைத் தேக்கி வைக்க உதவுகிறது.
பனை மரங்கள் சேமித்து வைக்கும் நீர், நிலத்தடி நீர்மட்டத்தை கணிசமாக உயர்த்த உதவுகிறது. பனைமரத்தின் இந்த தன்மை மழைநீர் சேகரிப்புக்கு ஒரு இயற்கையான தீர்வாக அமைகிறது என்பதால், சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications