தமிழர்கள் புறக்கணிப்பா? வஉசி துறைமுக ஆணைய தேர்வு குறித்து மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கேள்வி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதனையடுத்து தேர்வில் சிலர் பங்கேற்றிருந்தனர். ஆனால், இதில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து சு.வெங்கடேசன் எம்பி கேள்வி எழுப்பி மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே, என்எல்சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிப்படுவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி நிறுவனத்தில், உயர் பதவிகளில் 100% வட மாநிலத்தவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற தமிழ் இளைஞர்கள் ஒருவருக்குக் கூட தகுதி இல்லை என்று பாஜக அரசு முடிவு செய்துவிட்டதா? இது தமிழ்நாட்டிற்கு செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் ஆகாதா? வடமாநில இளைஞர்களை கொண்டு வந்து நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் திணிப்பது நல்லது அல்ல.
இத்தகைய போக்கு தொழில் அமைதியை குலைத்துவிடும்; என்.எல்.சி. நிறுவனத்தில் படிப்படியாக வடமாநிலத்தவர் வேலை வாய்ப்பில் நிரம்பி வழியும் நிலையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அரசியல் தலைவர்கள் எச்சரித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து, ரயில்வே பணிகளிலும் தமிழ்நாட்டை சேர்ந்தோர் அதிக அளவில் புறக்கணிப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது வஉசி துறைமுக ஆணைய தேர்வில் பங்கேற்ற தமிழர்கள் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் எழுத்து தேர்வு முடிந்து, பின்னர் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. எழுத்து தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்வர்களே தேர்வாகியிருந்தனர். அவர்கள் நேர்முகத் தேர்விலும் பங்கேற்றிருந்தனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தன. அதில், ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது x தளத்தில், “வ. உ. சி துறைமுக ஆணையம்: ஒருவர் கூட தேர்ச்சி இல்லையா? முதல் நிலை அதிகாரிகள் நியமனத் தேர்வுகளில் - எழுத்து தேர்வு, நேர்காணல்கள் முடிந்த பின்னர் - ஒருவர் கூட தேர்வு பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட அலுவலர் தகுதி 1, உதவி செயற்பொறியாளர்கள் மெக்கானிக்கல், சிவில் ஆகிய பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் அவை. இத்தகைய அறிவிப்பு ஆச்சரியம் அளிப்பதுடன் தேர்வு முறைமை குறித்த கேள்விகளையும் எழுப்பி உள்ளன.
இதுகுறித்து துறைமுக இணை அமைச்சர் மாண்புமிகு சாந்தனு தாகூர் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன். இதுகுறித்து மேல்மட்ட ஆய்வு நடத்தி அதன் விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு தேர்வின் நம்பகத்தன்மையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications