அடித்து துவைத்த கனமழை.. தாமிரபரணியில் பெருக்கெடுத்த வெள்ளம்! பொதுமக்களுக்கு வார்னிங்
தூத்துக்குடி: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே ஆற்றில் யாரும் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்திற்கு இரண்டு பருவங்கள் மழைப்பொழிவை கொண்டு வரும். ஒன்று தென்மேற்கு பருவமழை. இன்னொன்று வடகிழக்கு பருவமழை. கடந்த அக்.1ம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது.

மாவட்ட வாரியாக பார்த்தால் திருநெல்வேலியில் மழை அதிக அளவில் பெய்திருக்கிறது. அக்.1 தொடங்கி நேற்று வரை 669.3 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. இந்த காலத்தில் 340.9 மி.மீ அளவுதான் இயல்பான மழை அளவு. அந்த வகையில் மழை இயல்பை விட +96% கூடுதலாக பெய்திருக்கிறது. அதேபோல தூத்துக்குடியை பொறுத்தவரை, 288.3 மி.மீ என மழை பதிவாகியிருக்கிறது. எனவே தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. தாமிரபரணி வெள்ளம் படித்துறையையும் கல்மண்டபங்களையும் மூழ்கடித்து, அத்துடன் குறுக்குத்துறை முருகன் கோவிலுக்குள்ளும் புகுந்தது. எனவே ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று பிற்பகல் முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, மருதூர் அணைக்கட்டில் 8.5 அடியும், திருவைகுண்டம் அணைக்கட்டில் 6.5 அடியும், கோரம்பள்ளம் அணைக்கட்டில் 1.9 மீட்டரும் நீர்மட்டம் உள்ளது. கோரம்பள்ளம் அணைக்கட்டிற்கு நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் 01 கண் திறக்கப்பட்டு சுமார் 1000 கன அடி நீர் உப்பாத்து ஓடையில் திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே, மருதூர், திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரையிலான தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்கள் மற்றும் கோரம்பள்ளம் ஆறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ, கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கவும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவுறுத்தியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு மழை தீவிரமாக இருக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், மழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. குறிப்பாக அக்.1 தொடங்கி நேற்று வரை தமிழகம் முழுவதும் சராசரியாக 294.7 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த காலத்தில் 311.9 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6% குறைவாகவே பெய்திருக்கிறது. அக். 20 தொடங்கி அக்.25 வரை அதிகபட்ச மழை பதிவாகியிருக்கிறது. அதேபோல அக்.30-நவ.5 வரை மழை பெரிய அளவுக்கு இல்லை.












Click it and Unblock the Notifications