தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குரூரமான செயல்- 17 போலீஸ் மீது நடவடிக்கை தேவை- அருணா ஜெகதீசன் கமிஷன்
சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடத்தப்பட்ட போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியது குரூரமான செயல்; குருவிகளைப் போல சுட்டுக் கொலை செய்தனர்; போலீசார் ஒளிந்து கொண்டு சுட்டுப் படுகொலை செய்தனர்; 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
Recommended Video
தூத்துக்குடியில் செயல்பட்ட நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 2018-ல் பொதுமக்கள் தன்னெழுச்சியான போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிய கிராமங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தன.

இத்தொடர் போராட்டங்களி 100-வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணியை பொதுமக்கள் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்தப் பேரணி நடத்தப்பட்டது. 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தூத்துக்குடியில் 2018, மே 22-ந் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் ஈவிரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழகத்தையே குலைநடுங்க வைத்த கோர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2018-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி விசாரணை தொடங்கியது. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணை சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த ஆண்டு மே மாதம் இடைக்கால அறிக்கை வழங்கப்பட்டது.பின்னர் கடந்த மே மாதம் முழுமையான அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு வழங்கியது.
நீதிபதி அருணா ஜெகதீசன் குழுவின் பரிந்துரைகளில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை; எந்த ஒரு போலீசாரும் காயமும் அடையவில்லை. பொதுமக்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் எதுவும் இல்லா போதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதுவும் கலைந்து ஓடிய போராட்டக்காரர்களை குறிவைத்தும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சில போலீசார் ஒளிந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டனர். பொதுமக்களை குருவிகளைப் போல போலீசார் சுட்டுக் கொன்றனர்.
போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. போலீசாரின் துப்பாக்கி குண்டுகள் எந்த திசையில் இருந்து
வருகிறது என்றே தெரியாமல் போராட்டக்காரரர்கள் சிதறி ஓடினர். போலீசாரின் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது குரூரமான செயல்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு காரணமான தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.












Click it and Unblock the Notifications