தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடா.. 104ல் மக்கள் புகாரளிக்கலாம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம்!
தூத்துக்குடி: தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்களுக்கு 104 என்ற உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் பரவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டதால், தமிழ்நாட்டிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே காய்ச்சல் பரவலுக்கு அரசு மருத்துவமனைகள் போதிய மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு இருப்பதே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் அரசு மருத்துவமனைகள் மருந்து, மாத்திரைகளுக்கு எவ்வித தட்டுப்பாடுகள் இல்லை, அதேபோல் பருவநிலை காரணமாக காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது, அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை தேவை இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

புகார் எண் அறிமுகம்
இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் திறந்து வைப்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்தார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை. ஒருவேளை மருந்து தட்டுப்பாடு இருந்தால், இது தொடர்பான புகார்களுக்கு 104 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண் மூலம் புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

காலி பணியிடங்கள்
தொடர்ந்து, தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட 4,308 காலிப் பணியிடங்களும் சுகாதாரத்துறையில் விரைவில் நிரப்பப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி 2 மாதங்களுக்குள் புதிதாக 4,308 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வைரஸ் காய்ச்சல்
பின்னர் தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழ்நாட்டில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மூன்று நாட்கள் இருக்கும் இந்த காய்ச்சலானது பருவநிலை மாற்றத்தால் மட்டுமே ஏற்படுகிறது. இந்த காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

பூஸ்டர் தடுப்பூசி
தொடர்ந்து, இந்த மாதம் 30ம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம் என்ற மத்திய அரசின் அறிவிப்பின்படி பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 96 சதவிகிதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 91 சதவிகிதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications