ஸ்ரீவைகுண்டம் அரசு பள்ளியில் சாதி குறியீடுகள்.. தூத்துக்குடி கலெக்டர் செய்த அதிரடி சம்பவம்
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் பள்ளியில் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.. அப்போது, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாணவர்களிடம் பெயிண்ட் டப்பாவை கொடுத்து வகுப்பறைகளில் இருந்த சாதிய அடையாளங்களை அழிக்க வைத்தார் . தொடர்ந்து சமத்துவம் மற்றும் சமூகநீதி குறித்து உறுதிமொழி எடுக்கவைத்தார். பள்ளி வளாகத்தில் சாதி குறித்த எழுத்துக்கள் அடையாளங்கள் எழுதக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டில் யாருமே சாதி பார்ப்பது இல்லை.. இப்போது எல்லாம் யார் சார் சாதி பார்க்குறா என்ற கேட்பவர்களை முகத்தில் அறைவது போல் சம்பவங்கள் அடிக்கடி தமிழகத்தில் நடந்து வருகின்றன. சென்னையை தாண்டி வெளியில் போனால் உண்மையை பல பகுதிகளில் அறிய முடியும். அதேநேரம் தமிழ்நாட்டில் வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் சாதி ரீதியான சண்டைகள் அவ்வப்போது நடந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதி ரீதியான மோதல்கள் அதிகமாக நடந்துள்ளது. பட்டியல் சமூகத்தினர் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு தலித் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் தேவேந்திர ராஜ் என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டார். அவர் தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை எஸ்.சி, எஸ்.டி. ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவம் எதிரொலியாக நேற்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்ப்ர்டு ஜான், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு தலைவர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர். போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றார்கள். அப்போது தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத், மாணவர்களுக்கு சாதிய பாகுபாடு அற்ற சமுதாயம் அமைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்ப்ர்டு ஜான் பேசும் போது, படிக்கும் போது குற்ற வழக்குகளில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தினார். படிக்கும் போது இதுபோன்ற சண்டைகளில் சிக்கினால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதையும் எஸ்பி விளக்கினார். வேலைக்கு செல்லும் போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விளக்கி கூறினார்.
தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆல்ப்ர்டு ஜான் பேசுகையில், இங்கு பயிலும் மாணவர்கள், நல்ல மனிதர்களை பின்பற்றி எந்த நிலையிலும் உயர்ந்து சிறந்த மாணவராக வரவேண்டும் என்று அறிவுறுத்தினார். பள்ளி மற்றும் வளாகத்தில் சாதி குறித்து மாணவர்கள் எந்த கருத்தும் பேசக்கூடாது என்றும் பள்ளியில் படிக்கும் போது எவ்வித சாதிபாகுபாடும் இருக்க கூடாது என்றும் கூறினார். சாதிய நடத்தைகளை சிறிதும் பொருட்படுத்தாமல் படித்து நல்லநிலைக்கு வரவேண்டும் என்றும் பள்ளி வளாகத்தில் சாதி குறித்த எழுத்துக்கள் அடையாளங்கள் எழுதக்கூடாது என்றும் கூறினார்.
தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்ப்ர்டு ஜான் ஆகியோர் முன்னிலையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் சாதிய பாகுபாடு இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்ற விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். இதைத் தொடர்ந்து மாணவர்களிடம் பெயிண்டு டப்பாவை கொடுத்த கலெக்டர், பள்ளி வளாகம், வகுப்பறைகளில் வரையப்பட்டிருந்த சாதிய அடையாளங்கள், எழுத்துக்களை மாணவர்கள் மூலம் அழிக்க வைத்தார். மேலும் ஆசிரியர்களுக்கு,இந்த பிரச்சனைகளை மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பின்னர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பு நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படுகிறது. சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் விதமாக கிராம பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications