நான் பல்லைக் காட்டினேன்.. நீங்க எத காட்டுனீங்க? பதிலுக்கு பதில் போட்டோ! உதயநிதியை விளாசிய எடப்பாடி
தூத்துக்குடி: காஞ்சிபுரத்தில் நேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நானாவது கல்லைக் காட்டுகிறேன்... ஆனால் எடப்பாடி பழனிசாமி, மோடியிடம் பல்லைக்காட்டுவதாக, மோடி - எடப்பாடி சந்திப்பின் போது உள்ள படத்தை காட்டி விமர்சனம் செய்தார். இதற்கு தூத்துக்குடி கூட்டத்தில் எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் மோடியுடன் சிரித்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை காண்பித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நீங்களும் இத தானே காட்டுறீங்க.. வேற எதாச்சு காட்டுறீங்களா?... நான் சிரித்தால் என்ன தெரியும்? பல்லு தானே தெரியும் என்று விமர்சித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழத்தில் இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், தேர்தல் களம் அனல் பறக்கிறது.
ஸ்டாலின் மோடி புகைப்படம்: இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லா பாருங்க.. இவர் தான் கள்ள கூட்டணி வைத்திருக்கிறார். மோடியுடன் ஸ்டாலின் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து.. இது தான் அற்புதமான படம். யாருங்க கள்ளக்கூட்டணி வைத்தது? அதிமுகவா? இல்லை திமுகவா?... எடப்பாடியா? ஸ்டாலினா?.... ஸ்டாலின் தானே கள்ளக்கூட்டணி வைத்து இருக்கிறார். இது தாங்க கள்ளக்கூட்டணிக்கு சான்று.. யாரை ஏமாற்றுவதற்கு இந்த நாடகம்..
சிரிக்கிறது தப்பா?: நான் சிரித்தால் என்ன தெரியும்? பல்லு தானே தெரியும். உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார், பிரதமர் மோடி 2019 ஆம் ஆண்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அப்போது நானும் அவருடன் இருந்து பல்லை காட்டியதாக கொச்சைப்படுத்தி பேசுகிறார்.. இதற்கு உதயநிதி ஸ்டாலின் மோடியுடன் சிரித்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை காண்பித்து பேசிய எடப்பாடி, நீங்களும் இத தானே காட்டுறீங்க.. வேற எதாச்சு காட்டுறீங்களா?... நீங்க காட்டுனா சரி.. நான் காட்டுனா தவறா?.. நான் கேட்கிறேன் சிரிக்கிறது தப்பா? ஸ்டாலினுக்கு சிரிப்பே வராது. எங்கேயாவது சிரிச்சி பார்த்திருக்கீங்களா..
திமுக பதவி வெறி பிடித்த கட்சி: அதிமுகவை பொறுத்தவரை எப்போதும் நாங்கள் மறைமுகமாக யாருக்கும் ஆதரவு கொடுத்தது கிடையாது. வெளிப்படையாக கூட்டணி வைப்போம். இப்போது கூட நாங்கள் நினைத்து இருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்து இருக்க முடியும். ஆனால் நாங்க அப்படி பண்ணல. எங்களுக்கு அவசியம் இல்லை. உங்களை போல் பதவி வெறி பிடித்தவர்கள் நாங்கள் இல்லை.
கொள்ளையடிக்கவே முயற்சி செய்கிறது: உங்களை போல பதவி வெறி பிடித்த கட்சி அதிமுக இல்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக பொன்மனச்செம்மல் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட கழகம் அதிமுக. நீங்க தான் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டு குடும்ப உறுப்பினர் தான் ஆட்சி அதிகாரத்து வர வேண்டும் என்று மத்தியிலும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்.
மத்தியிலும் கொள்ளையடிக்க வேண்டும். மாநிலத்திலும் கொள்ளையடிக்க வேண்டும். இது தான் உங்கள் திட்டம். ஆனால் நாங்கள் எல்லாம் அப்படி அல்ல. சாதாரண ஆட்கள். சாதாரண மக்கள். ஏழை எளிய மக்களுடன் மக்களாக பழகி, அவர்களின் கஷ்டம், இன்பம், துன்பம் என அனைத்திலும் பங்கு பெற்ற கட்சி அதிமுக. எனவே எங்களுக்கு பதவி வெறி இல்லை. மக்கள் நலன் தான் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.
உதயநிதி நேற்று பேசியது என்ன?: காஞ்சிபுரத்தில் நேற்று உதயநிதி பேசுகையில் கூறியதாவது: எடப்பாடி என்ன சொல்கிறார். உதயநிதி மாற்றிப் பேச வேண்டும். திரும்ப திரும்ப கல்லை எடுத்துப் பேசுகிறார். நானாவது எய்ம்ஸ் கல்லைத் தான் காட்டினேன். இங்கே ஒருவர் பல்லைக் காட்டிக் கொண்டு இருக்கிறார் பாருங்க" என்று சொன்ன உதயநிதி 2019 எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, அப்போதைய முதல்வர் எடப்பாடி ஆகியோர் இருந்த படத்தை எடுத்துக் காட்டினார்.
ஸ்கிரிப்ட்டை மாற்றி பேச முடியாது: "நானாவது கல்லைத் தான் காட்டினார். ஆனால் எடப்பாடி பல்லைக் காட்டிக் கொண்டு இருக்கிறார். கல்லை வைத்து விட்டு பல்லைக் காட்டி போட்டோ தான் இது. இப்படி இருந்துவிட்டு எடப்பாடி இப்போது என்னை ஸ்கிரிப்ட்டை மாற்றிப் பேசுங்கள் என்கிறார். நான் ஏன் ஸ்கிரிப்ட்டை மாற்ற வேண்டும். நான் ஏன் எனது கொள்கையை மாற்ற வேண்டும்.
எங்களின் ஒரே கொள்கை இதுதான். எங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும். நீட் தேர்வு வேண்டாம். மாநில சுயாட்சி வேண்டும்.. இதுவே எங்கள் கொள்கை.. என்னால் உங்களை போல நேரத்திற்கு தகுந்தபடி ஆளுக்கு தகுந்தபடி ஸ்கிரிப்ட்டை மாற்றி பேச முடியாது" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications