"ஐபிஎஸ் ஆனாரு சரி! திடீர்னு எதுக்கு அரசியலுக்கு வந்தாரு தெரியுமா!" அண்ணாமலை குறித்து கீதா ஜீவன் பரபர
தூத்துக்குடி: திமுக சார்பில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கீதா ஜீவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் கிருஷ்ணன்கோவில் திடலில் திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் கீதா ஜீவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், பாஜக நோட்டாவை விடக் கூடுதல் வாக்குகளைப் பெற முயன்று வருவதாகவும் சாடினார்.

அமைச்சர் கீதா ஜீவன்
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கீதா ஜீவன், "தமிழ் மொழிக்காகவும் தமிழும் மக்களுக்காகவும் ஆட்சி புரியக்கூடியவராகத் தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அதனால்தான் இந்தியா டுடே பத்திரிக்கை இந்தியாவின் சிறந்த மாநிலமாகத் தமிழகம் செயல்படுவதாகச் சுட்டிக்காட்டி உள்ளனர். இதுவே தமிழக முதல்வரின் செயல்பாடுகள் சாட்சி..

அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு மேடையில் தமிழக முதல்வர் ரயிலில் பயணம் செய்வதைக் கூறுகிறார். ஆனால் அவர் தலைவர் பிரதமர் மோடி தனி விமானத்தில் செல்வதைக் கூற மாட்டேன் என்கிறார். இதில் பித்தலாட்டதனம்.. ஊர் ஊருக்குப் போய் பொய்களைப் பரப்பி வருகிறார். இவருக்குக் கொடுத்த ஐபிஎஸ் வேலையைச் செய்ய முடியாமல்.. அரசியலுக்கு வந்தவர்தானே இவர்.. நாட்டுக்காகப் பயிற்சி கொடுத்து அங்கே மக்களுக்காக வேலை செய்யச் சொன்னால், அதைச் செய்ய முடியாமல் அரசியலுக்கு வந்துள்ளார்.

முழுவதும் பொய்
அவர் அரசியல் வந்து ஒரு வருடம்தான். ஆகிறது.. நான் அரசியலுக்கு வந்து 26 வருடங்கள் ஆகிறது.. நாங்கள் அனைவரும் ஒரே கொள்கைப் பிடிப்புடன் திமுகவில் இருக்கிறோம்... அவர் கற்பனையாக எல்லாவற்றையும் கூறி வருகிறார்.. அவர் சொல்வதை வைத்து ஒரு நல்ல கதை எழுதலாம்.. புத்தகமாவது நன்கு விற்பனையாகும்.. அவர் சொல்வதையெல்லாம் கேட்டு நம்ப நாங்க காதல் பூ வைத்துக்கொண்டு அலையவில்லை.. இது பெரியாரால் பண்பட்ட மண்.. அண்ணாவால் சீரமைக்கப்பட்டு மண்.. கருணாநிதியால் வளர்க்கப்பட்ட மண்.. நாங்க தமிழர்களால் ஒருங்கிணைந்து இருக்கிறோம்.. எப்போதும் சனாதனத்திற்கு எதிராகவே இருப்போம்.

நோட்டா
சமஸ்கிருதம் படித்தால் தான் டாக்டரா முடியும் என்று முன்பு இருந்த நிலையை முறியடித்திருக்கிறோம்.. சனாதனம் பேசும் இவர்களால் தான் ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என யாரும் கோவிலுக்குப் போக முடியாத நிலை இருந்தது.. படிக்கவே கூடாது எனச் சொன்னார்கள். அந்த நிலையையும் முறியடித்துள்ளோம். இவர்கள் சனாதனத்தைப் பேசி பொதுமக்களிடையே பிளவை ஏற்படுத்த முயல்கிறார்கள். ஆனால், இவர்களால் தமிழகத்தில் நோட்டாவை விடக் கூட அதிக வாக்குகளைப் பெற முடிவதில்லை. அதற்காகவே அவர்கள் இப்படிச் செய்து வருகிறார்கள்.

முட்டை விவகாரம்
சிறார்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டையைப் பற்றிப் பேசுகிறார்.. ஏற்கனவே இதைப்பற்றி நான் கூறியுள்ளேன்.. வாகனங்களில் வரும் போது ஒரு சில முட்டை டேமேஜ் ஆவது வழக்கம்.. அந்த முட்டையை மாணவர்களுக்கு வழங்குவதில்லை.. அதைத் தனியாக எடுத்து வைத்து மாற்று மூட்டை வாங்கி விநியோகிக்கப்படும்.. இதை பாஜகவினர் வேண்டுமென்றே போட்டோ எடுத்து, அதைப் பரப்பி வருகின்றனர்.. இதை வைத்துக்கொண்டு அண்ணாமலை அரசியல் செய்கிறார்.. இதோடு அவர் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.. இல்லையென்றால் அவர் பேசும் மேடையில் ஏறி நாங்கள் பேச வேண்டி வரும்..

உரிமை தொகை
திமுக சார்பில் தேர்தல் சமயத்தில் மகளிருக்கு உரிமை தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். நீங்கள் கவலைப்பட வேண்டாம். கண்டிப்பாக நாங்கள் செய்வோம்.. எங்கள் தலைவர் செய்வார். இப்போதுதான் ஆட்சிக்கு வந்து ஒன்றை ஆண்டு ஆகிறது.. மிக விரைவில் இது தொடர்பான அறிவிப்பைத் தக்க நேரத்தில் முதல்வர் வெளியிடுவார்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications