வெளிச்சத்துக்கு வந்த நூதன பால் திருட்டு.. தினசரி 2500 லிட்டர் அபேஸ்! ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஆவின்
வேலூர் : ஆவினில் ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இரு வழித்தடங்களில் இயக்கப்பட்டு நாள்தோறும் 2,500 லிட்டர் பால் திருடப்பட்டது அம்பலமான நிலையில் சாய்ராம் செக்யூரிட்டி ஏஜென்சி ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது ஆவின் நிர்வாகம்.
வேலூர் சத்துவாச்சாரியில் வேலூர் மாவட்ட ஆவின் தலைமை அலுவலகம் உள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்து நாள் ஒன்றிற்கு ஒரு லட்சம் லிட்டருக்கு மேலாக இந்த நிறுவனத்திலிருந்து சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு பால் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஆவின் முகவர்களுக்கு பணம் கட்டிய பின்னரும் ஆவின் பால் சரியாக விநியோகம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. பால் கொள்முதல், விநியோகம், பால் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் நிலவி வந்த பிரச்சனைகளை பயன்படுத்திக் கொண்டு பால் திருடும் சம்பவங்களும் அரங்கேறி வந்தது.
விநியோகப் பிரிவில் உள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால் பல மாதங்களாக ஒரே பதிவு எண்ணில் இரண்டு வேன்களை இயக்கி நாள்தோறும் 2500 லிட்டர் பால் திருட்டு சம்பவம் நடைபெற்றதும் அம்பலமாகியுள்ளது. ஆவின் பொது மேலாளர் (பொறுப்பு) சுந்தரவடிவேலு ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது ஒரே பதிவெண் கொண்ட 2 வாகனங்களில் பால் ஏற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
ஒரு வாகனம் போலியானது என தெரிய வந்தது. அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒரே பதிவெண்ணில் 2 வேன்களை இயக்கி, அதில் தினமும் சுமார் 2,500 லிட்டர் பாலை நூதன முறையில் திருடியது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆவினில் ஒரே பதிவெண்ணில் இயங்கிய இரண்டு வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாய்ராம் செக்யூரிட்டி ஏஜென்சி உரிமையாளர் கோபாலுக்கு 2 வாகனங்களை அனுமதித்தது தொடர்பாக ஜூன் 12ம் தேதிக்குள் விளக்கமளிக்க ஆவின் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செக்யூரிட்டி சர்வீஸ் நிர்வாகம் விளக்கமளித்த பிறகு, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசு வாகனத்திலேயே பால் விநியோகம் நடைபெறும் எனவும் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications