உழவன் ஆப்.. மகத்துவமான மண்வள அட்டை.. விவசாயிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
வேலூர்: விவசாயிகள் அனைவரும் உழவன் செயலியில் தங்கள் நிலத்திற்கான மண்வள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம் என்று வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சோமு தெரிவித்துள்ளார்.
பயிர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு உழவர் நலன் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு உடனடியாக தெரிவிக்கும் வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறை பல்வேறு வேளாண் விரிவாக்க சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு வேளாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களை கைபேசி மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது தான் உழவன் செயலி.

பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானிய திட்டங்கள், விளைச்சல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் போன்று பல்வேறு இடங்களுக்கு சென்று தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களையும் விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைப்பதற்கான வழிமுறைகளையும் உழவன் செயலியில் விவசாயிகள் அறியலாம்.
கிராமங்களுக்கு பயிர் வாரியான காப்பீட்டுக் கட்டணம், காப்பீடு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள், அணுக வேண்டிய இடங்கள் மற்றும் பயிர்க்காப்பீட்டின் தற்போதைய நிலை பற்றிய தகவல்கள். உரங்கள் இருப்பு நிலை: தனியார், கூட்டுறவு விற்பனை நிலையங்களில் உள்ள இரசாயன உரங்களின் இருப்பு, விலை பற்றிய விவரங்கள்.மாவட்ட வாரியாக தினசரி வானிலை முன்னறிவிப்பு மற்றும் தமிழ் மொழியில் உள்ளூர் வானிலையாளர் அன்றாடம் வழங்கும் வானிலை முன்னறிவிப்பு.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், உழவர் சந்தைகளில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் காய்கறிகளின் தினசரி சந்தை விலை. வேளாண் பொறியியல் துறை மற்றும் விவசாயிகளிடம் வாடகைக்கு உள்ள இயந்திரங்கள், வாடகை, வாடகை முன் பதிவு பற்றிய விவரங்கள் உள்பட பல்வேறு தகவல்களை அறிய முடியும். அதேபோல் விவசாயிகள் அனைவரும் உழவன் செயலியில் தங்கள் நிலத்திற்கான மண்வள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.
இதுதொடர்பாக வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சோமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பயிர் செய்யும் முன்பு வயல்களில் உள்ள மண்ணை பரிசோதித்து பயிர் சாகுபடி, உர பரிந்துரை மேற்கொள்ள வேளாண் துறை அறிவுறுத்தி வருகிறது. இதற்கு வேளாண் துறையில் தமிழ் மண் வளம் என்ற இணையதளம் தனியாக உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் வயல்களில் ஏற்கனவே சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளின் ஆய்வு முடிவுப்படி, மண் வள அட்டைகள். அனைத்து சர்வே எண்களுக்கும் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் உழவன் செயலியில் உள்ள தமிழ் மண் வளம் இணைப்பில் சென்று தங்கள் நிலம் இருக்கும் மாவட்டம், தாலுகா, சர்வே எண், விவசாயி பெயர், மொபைல் எண்ணை உள்ளீடு செய்து தங்கள் நிலங்களுக்கு மண்வள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த அட்டையில் மண்ணின் கார அமிலத்தன்மை, உப்பின் நிலை, கரிம உரத்தின் நிலை, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், அந்த பயிர்களுக்கு உர பரிந்துரை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
விவசாயிகள் அனைவரும் உழவன் செயலியில் தங்கள் நிலத்திற்கான மண்வள அட்டையை பதிவிறக்கம் செய்து, அதற்கேற்ப பயிர் சாகுபடி செய்து உர மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications